சனி, ஜனவரி 30, 2016

ஒரு சின்ன கதை.

ஒரு சின்ன கதை. அவர் ஒரு ஞானி. அவரைப் பல இடங்களில் தேடி அலுத்த ஒருவர் முடிவாக அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டார். அவசர அவசரமாக அவர் தங்கியிருக்கும் வீட்டின் கதவை அடித்தார். நெடுநாள் தேடிய எரிச்சல் மற்றும் பரபரப்பு காரணமாக வேகவேகமாக அவர் இருந்த வீட்டுக் கதவை டமால் என்று நெட்டித் தள்ளினார். பரபரப்புடன் வீட்டுக்குள் நுழைந்தவர் செருப்பைக் கழற்றும் பொறுமைகூட இன்றி இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கழற்றி விட்டு எறிந்தார். செருப்புகள், சுவரில் மோதி சரிந்து விழுந்தன. தட தட வென்று ஞானி இருந்த அறைக்குள் நுழைந்தவர் தடாலென அவரது காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுதார். தமக்கு வாழ்க்கை பற்றிய ஞானம் தரவல்ல குரு அவரே என்று கண்டறிந்ததாகப் பெரிதாக அலறினார்.
ஞானியோ அவரைச் சட்டை செய்யாது முகத்தைத் திருப்பிக் கொண்டார். மிகுந்த மதிப்போடு குருவைத் தேடிவந்த தம்மை அவமதிப்பது சரியா என்று ஞானியைக் கேட்டார் வந்தவர்.ஞானி தீர்க்கமாக வந்தவரை உற்று நோக்கினார். நீ எங்கு என்னை மதித்தாய்? உன்னை நான் எப்படி மனமார வரவேற்க முடியும். உன் செய்கைகளை நான் கவனித்துக் கொண்டேதான் இருக்கிறேன். அந்த வாசல் கதவுகளை நீ ஏன் அவமதித்தாய். அவை உனக்கு என்ன தீங்கு இழைத்தன? எவ்வளவு காலமாக இந்த வீட்டை அவை காவல் காத்து வருகின்றன. கடமையைச் சரியாக ஆற்றும் கதவுகளை நோகும்படி நெட்டித் தள்ளினாயே அது சரியா? உன்னை வெப்பத்திலிருந்தும் முள்ளிலிருந்தும் பாதுகாத்த செருப்புகளை எவ்வளவு அலட்சியமாக விட்டெறிந்தாய்? பண்பாடற்றவன் நீ! நன்றி இல்லாதவன் நீ! அந்தச் செருப்புகள் சுவரில் முட்டிய போது அவை எவ்வளவு அவமானப்பட்டிருக்கும் என்பது உனக்குத் தெரியுமா? எவ்வளவு வலியை உணர்ந்திருக்கும் தெரியுமா? போ… போய்… செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டு விட்டு வா… அதன்பிறகு வேண்டுமானால் உன்னோடு பேசுகிறேன்” என்றார் ஞானி.
உங்களுக்கென்ன பைத்தியமா? செருப்புக்கும் கதவிற்கும் உயிருண்டா என்ன? அவற்றிடம் மன்னிப்பு கேட்க… என்றார் வந்தவர்.உன் கோபத்தை அவற்றின் மீது காட்டும் போது அவற்றை உயிருள்ளவை போல நினைத்துத் தானே காட்டினாய். அப்போது உயிருள்ளவை போல நடத்தலாம் என்றால் மன்னிப்பும் கேட்கலாம் தப்பில்லை… போ… போய் உன் தவறுக்காக செருப்புகளிடமும் கதவுகளிடமும் மன்னிப்பு கேள்” என்றார் ஞானி.
வந்தவருக்கோ ஞானியிடம் காரியம் ஆக வேண்டும். ஞானியைத் திருப்தி செய்வதற்காகவாவது மன்னிப்புக் கேட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாகச் செருப்புக்களிடமும் கதவுகளிடமும் மன்னிப்பு வேண்டினான். ஆனால், அப்படி கேட்கும்போதே தன் மனத்தில் இதுவரை இருந்த க்ரோதம், பாரம் குறைவதை உணர்ந்தான். தான் பாரமான மண்ணாக இருந்ததில் இருந்து லேசான ஆகாயமாக மாறியதை அனுபவித்தான். அவனுக்கு ஆனந்தக் கண்ணீர் வரத் தொடங்கியது.
முற்றிலும் வித்தியாசமானவனாக வந்து ஞானியை வணங்கினான். ஞானி அன்புடன் மகனே. என்று அழைத்து இறுகத் தழுவினார். யாரோ பூமழை பொழிவதுபோல் இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக