ஞாயிறு, ஜனவரி 31, 2016

காஞ்சி காமகோடி மடத்தின் வரலாறு

காஞ்சி காமகோடி மடத்தின் வரலாறு:- 
ஆதிசங்கரபகவத்பாதாள் தனது திக்விஜயத்திற்கு பிறகு,மோக்ஷபுரி என போற்றப்படும், காஞ்சிமாநகரத்தை வந்தடைகிறார்;; அங்கே தனக்கென ஒரு ஆஸ்ரமத்தை அமைத்திக் கொண்டார்;
தனது 32 வயதிற்குள் வியக்க தக்கும் வகையில் சாதனை புரிந்தார்.. அவரின் வாழ்க்கையில் சில நிகழ்வுகள்:- பிறந்தது-- கலி வருடம் 2593(கி.மு 509);; சந்நியாசம் மேற்கொண்டது-- கலி 2603(கி.மு 499);; த்வாரகா மடத்தை அமைத்து அதன் தலைவராக ஹஸ்தமாலகரை நியமித்தது-- கலி 2611(கி.மு 491);; சீடர் தோடகாச்சாரியாரை தலைவராகக் கொண்டு ஜோதிஷ் மடத்தை ஸ்தாபித்தார்-- கலி 2616(கி.மு 486);; பத்மபாதரை தலைவராக்கி கோவர்த்தன மடத்தை ஸ்தாபித்தார்-- கலி 2617(கி.மு 485);; சிருங்கேரியில் சீடர் சுரேஸ்வரை தலைவராக்கி சிருங்கேரி மடத்தை ஸ்தாபித்தார் ---கலி 2618(கி.மு 484);;;ஸர்வக்ஞ பீடமென காமகோடி பீடத்தை காஞ்சியில் உருவாக்கினார்--- கலி 2620(கி.மு 482);; ஆதி சங்கரர் காஞ்சியில் முக்தியடைந்தார்--கலி 2625(கி.மு477);; இவர் கைலாசத்திலிருந்து ஐந்து ஸ்படிக லிங்கங்களை கொண்டு வந்தார்;; அவைகள் இப்போதும் கீழ்க்கண்ட இடங்களில் உள்ளன:- முக்தி லிங்கம்--கேதார்நாத்;; வர லிங்கம்--நேபாளம்;; போக லிங்கம்--சிருங்கேரி மடம்;; மோக்ஷ லிங்கம்--சிதம்பரம்;; யோக லிங்கம்--காஞ்சி காமகோடி மடம்;;

1. ஆதி சங்கரபகவத்பாதாள் அவர்களே காஞ்சி மடத்தின் ஸ்தாபகர்;; இங்கு அவர் ஸர்வக்ஞ பீடத்தின் தலைமையை ஏற்றார்.. அங்கு அப்போது வந்திருந்த ப்ரம்மதேசத்தை சேர்ந்த சிறுவனின் மேதாவிலாசத்தைக் கண்டு, அவனை தனது சீடரின்(சுரேஸ்வரரின்) கீழ் பாடம் பயிலச் சொல்லி, பிறகு அவரே சுரேஸ்வரருக்கு, பிறகு பீடம் ஏறினார்;; அவருக்கு ஆதிசங்கரரே "ஸர்வக்ஞாத்மன்" என பெயர் சூட்டினார்;; ஆதிசங்கரர் தனது சிறுவயதிலேயே சந்நியாசம் பூண்டார்;; அதே போல் காஞ்சி மடத்திற்கு அதிபதியாகிறவர்கள் ப்ரம்மசரியத்திலிருந்து நேராக சந்நியாசம் பெறவேண்டும்;; அவர்களின் எல்லோருடைய திருநாமத்துடன் "இந்திர சரஸ்வதி" சேர்க்கப்படும்;;


2 ஸ்ரீ சுரேஸ்வர:- இவர் மஹிஸ்மதியை சேர்ந்தவர்;; மந்தனமிஸ்ரர் என்ற பெயரில் வாதிட்டு தோற்று, ஆதிசங்கரரின் சீடரானார்;; இவர் காஞ்சியில் முக்தி அடைந்தார்--கி.மு 407;;இவர் எழுதிய நூல்கள் வாதிக, நைஷ்கர்ம்ய சித்தி;; இவரின் சிலை காமகோடிபீடத்திலுள்ளது;; தினமும் அவருக்கு பூஜை செய்வர்;; இன்றும் மந்தனமிஸ்ர அக்ரஹாரம் காஞ்சியிலுள்ளது;;
3. ஸ்ரீஸர்வக்ஞாத்மன்:- தாமிரபரணி தீரத்திலிருந்து வந்தவர்;; ஏழு வயதில் சந்நியாசம் பெற்றார்;; ஸ்ரீ சுரேஸ்வரரின் கீழ் பாடம் பயின்றவர்;; இவர் எழுதிய நூல்கள்--ஸர்வக்ஞ விலாசம், சம்க்ஷேப ஸரீரகா;; காஞ்சியில் கி.மு 364ல் முக்தியடைந்தார்;;
4. ஸ்ரீஸத்யபோதேந்திர சரஸ்வதி:- இவர் சேர நாட்டை சேர்ந்தவர்;; இவரும் சங்கரரின் பாஷ்யத்திற்கு உரை எழுதியுள்ளார்;;காஞ்சியில் கி.மு268ல் முக்தியடைந்தார்;;
5. ஸ்ரீஞாநேந்திர சரஸ்வதி:- இவர் எழுதிய நூல் "சந்திரிகா";; காஞ்சியில் கி.மு 205ல் முக்தியடைந்தார்;
6. ஸ்ரீசுத்தானந்தேந்திரசரஸ்வதி:- வேதாரண்யத்தை சேர்ந்தவர்;; காஞ்சியில் கி.மு 124ல் முக்தியடைந்தார்;;
7. ஸ்ரீஆனந்த கணேந்திரசரஸ்வதி:- சேரநாட்டை சேர்ந்தவர்;; சங்கர பாஷ்யத்திற்கு உரை எழுதியவர்;; காஞ்சியில் கி.மு 55ல் முக்தியடைந்தார்;;
8. ஸ்ரீகைவல்யானந்த யோகேந்திரசரஸ்வதி:- திருப்பதியை சேர்ந்தவர்;; காஞ்சியில் கி.பி 28ல் முக்தியடைந்தார்;;
9. ஸ்ரீக்ருபா சங்கரேந்திரசரஸ்வதி:- ஆந்திர நாட்டை சேர்ந்தவர்;;ஆதிசங்கரரின் ஷண்மத
ஸ்தாபனத்தை உறுதிபடுத்தி அதை சீரிய முறையில் மக்களுக்கு அளித்தார்;; பகதி மார்க்கத்தை எளியமுறையில் செய்ய உதவினார்;; விந்திய பர்வதத்தில் கி.பி 69 ல் முக்தியடைந்தார்;;
10. ஸ்ரீசுரேஸ்வரசரஸ்வதி:-- மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்;; காஞ்சியில் கி.பி 127ல் முக்தியடைந்தார்;;
11. ஸ்ரீசிவானந்த சித்கணேந்திரசரஸ்வதி:- கர்நாடகத்தை சேர்ந்தவர்;; விருத்தாசலத்தில் கி.பி 172ல் முக்தியடைந்தார்;;
12. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி(I):- பாலாற்றங்கரையிலிருந்து வந்தவர்;; சேஷாசல மலையில் கி.பி 235ல் மறைந்தார்;;
13. ஸ்ரீசத்சித் கணேந்திரசரஸ்வதி:- கடிலம் தீரத்திலிருந்து வந்தவர்;; அவதூதராக வாழ்ந்தவர்;; காஞ்சியில் கி.பி 272ல் முக்தியடைந்தார்;;
14. ஸ்ரீவித்யா கணேந்திரசரஸ்வதி:- ஆந்திர நாட்டை சேர்ந்தவர்;; உக்ரபைரவரை அடக்கியவர் என்பர்;; அகஸ்திய மலையில் கி.பி 317ல் முக்தியடைந்தார்;;
15. ஸ்ரீகங்காதரேந்திரசரஸ்வதி:- ஆந்திர நாட்டை சேர்ந்தவர்;; அகஸ்தியமலையில் கி.பி 329ல் முக்தியடைந்தார்;;
16. ஸ்ரீஉஜ்வல சங்கரேந்திரசரஸ்வதி:- மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்;; காஷ்மீரம் அருகிலுள்ள காலாபுரியில் கி.பி367ல் முக்தியடைந்தார்;;
17. ஸ்ரீசதாசிவேந்திரசரஸ்வதி:- காஷ்மீரத்தை சேர்ந்தவர்;; நாசிக் அருகிலுள்ள த்ரயம்பகத்தில் கி.பி 375ல் முக்தியடைந்தார்;;
18. ஸ்ரீயோகபிலக சுரேந்திரசரஸ்வதி:- மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்;; உஜ்ஜயினில் கி.பி 385ல் முக்தியடைந்தார்;;
19. ஸ்ரீமார்த்தாண்ட வித்யாகணேந்திரசரஸ்வதி:- கோதவரி தீரத்தில் கி.பி 398ல் முக்தியடைந்தார்;;
20. ஸ்ரீமூக சங்கரேந்திரசரஸ்வதி:- வானசாஸ்திர வல்லுநர்;; காஞ்சிகாமாட்சியின் கடாக்க்ஷத்தால் பேசியவர்;; கோதவரி தீரத்தில் கி.பி 437, முக்தியடைந்தார்;;
21. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி(II):- வடகர்நாடகத்தை(கொங்கண்) சேர்ந்தவர்;; காசியில் கி.பி 447ல் முக்தியடைந்தார்;;
22. ஸ்ரீ போதேந்திரசரஸ்வதி:- மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்;; ஜகந்நாதக்ஷேத்ரத்தில் கி.பி 481ல் முக்தியடைந்தார்;;
23. ஸ்ரீசச்சித் சுகேந்திரசரஸ்வதி:- ஆந்திரவிலுள்ள ஸ்ரீகாகுலத்தை சேர்ந்தவர்;; சுப்ரஹமண்ய பக்தர்;; ஜகந்நாதக்ஷேத்ரமருகில் கி.பி 512ல் முக்தியடைந்தார்;;
24. ஸ்ரீசித் சுகேந்திரசரஸ்வதி:- கர்நாடகத்தை(கொங்கண்) சேர்ந்தவர்;; இவர் கொங்கணத்திலேயே வாழ்ந்தார்;;ரத்னகிரியில் கி.பி 527ல் முக்தியடைந்தார்;;
25.ஸ்ரீசச்சிதாநந்த கணேந்திரசரஸ்வதி:- ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர்;; கோகர்ணத்தில் கி.பி 548ல் முக்தியடைந்தார்;;
26. ஸ்ரீப்ரஞான கணேந்திரசரஸ்வதி:- பெண்ணாற்றங்கரையை சேர்ந்த ஊர்; காஞ்சியில் கி.பி 565 ல் முக்தியடைந்தார்;;
27. ஸ்ரீசித் விலாசேந்திரசரஸ்வதி:-ஹஸ்தகிரியை சேர்ந்தவர்(ஆந்திராவிலுள்ளது);; காஞ்சியில் கி.பி 577ல் முக்தியடைந்தார்;
28. ஸ்ரீமஹாதேவ வேலேந்திரசரஸ்வதி:- ஆந்திராவிலுள்ள பத்ராசலத்தை சேர்ந்தவர்;; கி.பி 601, காஞ்சியில் முக்தியடைந்தார்;
29. பூர்ண போதேந்திரசரஸ்வதி:- காஞ்சியில் கி.பி 618ல் முக்தியடைந்தார்;;
30. ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி:- காஞ்சியில் கி.பி 655ல் முக்தியடைந்தார்;;
31. ஸ்ரீ ப்ரம்மாநந்த கணேந்திரசரஸ்வதி:- கடிலம் நதியிலுள்ள கிரமாத்தை சேர்ந்தவர்;; காஷ்மீர மன்னால் போற்றப்பட்டவர்;; காஞ்சியில் கி.பி 668, முக்தியடைந்தார்;;
32. ஸ்ரீசிதாநந்த கணேந்திரசரஸ்வதி:- காய்ந்த சருகுகளை உண்டே வாழ்ந்தவர்;; கி.பி 672ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
33. ஸ்ரீ சச்சிதாநந்தேந்திரசரஸ்வதி:- ஆந்திராவை சேர்ந்தவர்;; கி.பி 692ல் முக்தியடைந்தார்;;
34. ஸ்ரீ சந்திரசேகரேந்திரசரஸ்வதி(III):- வேகவதி நதிக்கரையிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர்;; காஞ்சியில் கி.பி 710ல் முக்தியடைந்தார்;;
35. ஸ்ரீசித் சுகேந்திரசரஸ்வதி:- வேதாசலத்தை சேர்ந்தவர்;; சஹ்யமலையில் கி.பி 737ல் முக்தியடைந்தார்;;
36. ஸ்ரீசித் சுகாநந்தேந்திரசரஸ்வதி:- பாலாற்றங்கரையை சேர்ந்த கிராமம்;; கி.பி 758ல் கஞ்சியில் முக்தியடைந்தார்;;
37. ஸ்ரீவித்யா கணேந்திரசரஸ்வதி:- சிதம்பரத்தில் கி.பி 795ல் முக்தியடைந்தார்;;
38. ஸ்ரீஅபிநவ சங்கரேந்திரசரஸ்வதி:- சிதம்பரத்தை சேர்ந்தவர்;; எல்லோராலும் போற்றப்பட்டவர்;; தர்க்க சாஸ்திரத்தில் வல்லவர்;; காஷ்மீரநாட்டில் பீடமேறியவர் ;; கி.பி 840ல் இமாலயத்தில்(ஆத்ரேய மலையில்)முக்தியடைந்தார்;;
39. ஸ்ரீ சத்சித் விலாசேந்திரசரஸ்வதி:-கி.பி 873ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
40. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:- கர்நாடகத்தை சேர்ந்தவர்;; கி.பி 915ல் முக்தியடைந்தார்;;
41. ஸ்ரீ கங்காதரேந்திரசரஸ்வதி:- கர்நாடகத்தை சேர்ந்தவர்;; கி.பி 950ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
42. ஸ்ரீ ப்ரம்மாநந்த கணேந்திரசரஸ்வதி:- கி.பி 978ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
43. ஸ்ரீஆனந்த கணேந்திரசரஸ்வதி:- துங்கபத்திரா தீரத்தை சேர்ந்தவர்;; காஞ்சியில் கி.பி 1014ல் முக்தியடைந்தார்;;
44. ஸ்ரீபூர்ண போதேந்திரசரஸ்வதி:- கர்நாடகத்தை சேர்ந்தவர்;; கி.பி 1040. காஞ்சியில் முக்தியடைந்தார்;
45. ஸ்ரீபரம சிவேந்திரசரஸ்வதி:- காஞ்சியில் கி.பி 1061ல் முக்தியடைந்தார்;;
46ஸ்ரீசந்திரானந்த போதேந்திரஸ்ரஸ்வதி:- கதாசரித சாகரத்தை எழுதியவர்;; கி.பி 1098ல் அருணாசலக்ஷேத்ரத்தில் முக்தியடைந்தார்
47. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி(IV):- மிகவும் போற்றப்பட்டவர்; அருணாசல க்ஷேத்திரத்தில் கி.பி 1166ல் முக்தியடைந்தார்;;
48. ஸ்ரீஅத்வைதாநந்த போதேந்திரசரஸ்வதி:- பெண்ணாற்றங்கரையை சேர்ந்தவர்;; கி.பி 1200ல் சிதம்பரத்தில் முக்தியடைந்தார்;;
49. ஸ்ரீமஹா தேவேந்திரசரஸ்வதி:- தஞ்சாவூரை சேர்ந்தவர்;; கடில தீரத்தில் கி.பி 1247ல் முக்தியடைந்தார்;;
50. ஸ்ரீசந்திர சூடேந்திரசரஸ்வதி:- இவரும் கடில நதிதீரத்தில் கி.பி 1297ல் முக்தியடைந்தார்;;
51. ஸ்ரீவித்யா தீர்த்தேந்திரசரஸ்வதி:- பில்வாரண்யத்தை சேர்ந்தவர்; கி.பி 1385ல் இமாலயத்தில் முக்தியடைந்தார்;;
52. ஸ்ரீ சங்கராநந்தேந்திரசரஸ்வதி:- திருவடைமருதூரை சேர்ந்தவர்;; கி.பி 1417ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
53. ஸ்ரீபூர்ணாநந்த சதாசிவேந்திரசரஸ்வதி:-நாகாரண்யத்தை சேர்ந்தவர்;; கி.பி 1498ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
54. ஸ்ரீவ்யாசாசல மஹாதேவேந்திரசரஸ்வதி:- காஞ்சியை சேர்ந்தவர்;; கி.பி 1507ல் வ்யாசாசலத்தில் முக்தியடைந்தார்;;
55. ஸ்ரீசந்திர சூடேந்திரசரஸ்வதி:- தென்னாற்காடு மாவட்டைத்தை சேர்ந்தவர்;; கி.பி 1524ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
56. ஸ்ரீசர்வக்ஞ சதாசிவபோதேந்திரசரஸ்வதி:- வடபெண்ணாற்றங்கரையை சேர்ந்தவர்;; கி.பி 1539ல் ராமேஸ்வரத்தில் முக்தியடைந்தார்;;
57. ஸ்ரீ பரமசிவேந்திரசரஸ்வதி:- பம்பாதீரத்தை சேர்ந்தவர்;; மஹான் சதாசிவப்ரம்மேந்திராளின் குரு;; கி.பி 1586ல் திருவெண்காட்டில் முக்தியடைந்தார்;;
58. ஸ்ரீஆத்ம போதேந்திரசரஸ்வதி:- விருத்தாசலத்தை சேர்ந்தவர்;;இவர் சதாசிவப்ரம்மேந்திராளை குருரத்னமாலிகாவை எழுத சொன்னவர்;; கி.பி 1638ல் தென்பெண்ணாற்றங்கரையில் முக்தியடைந்தார்;;
59. ஸ்ரீபகவன்நாம போதேந்திரசரஸ்வதி:- காஞ்சியை சேர்ந்தவர்;; நாமசங்கீர்த்தனத்தின் மகிமையை எடுத்துரைத்தவர்; கி.பி 1692ல் கோவிந்தபுரத்தில்(கும்பகோணமருகில்) முக்தியடைந்தார்;;
60. ஸ்ரீஅத்வைதாத்ம ப்ராகசேந்திரசரஸ்வதி:- கி.பி 1704ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
61. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:- கி.பி 1746ல் திருவொற்றியூரில் முக்தியடைந்தார்;;
62. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி(V):- இவர் காலத்தில் தான் போரினால். மடத்தை கும்பகோணத்திற்கு மாற்றப்பட்டது;; கி.பி 1783ல் கும்பகோணத்தில் முக்தியடைந்தார்;;
63. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:- கும்பகோணத்தை சேர்ந்தவர்;; கி.பி 1813; கும்பகோணத்தில் முக்தியடைந்தார்;
64. ஸ்ரீ சந்திரசேகரேந்திரசரஸ்வதி(VI):- இவர் கோவிந்த தீக்ஷதர் வம்சத்தை சேர்ந்தவர்;; கி.பி 1851ல் கும்பகோணத்தில் முக்தியடைந்தார்;;
65. ஸ்ரீசுதர்சன மஹாதேவேந்திரசரஸ்வதி:- திருவடைமருதூரை சேர்ந்தவர்;; கி.பி 1891ல் இளையாத்தங்குடியில் முக்தியடைந்தார்;;
66. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி(VII):- உடையம்பாக்கத்தை சேர்ந்தவர்;; கி.பி 1907ல் கலவையில் முக்தியடைந்தார்;;
67. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:- ஏழுநாட்களே பீடத்தில் இருந்தார்;; கி.பி 1907ல் கலவையில் முக்தியடைந்தார்;;
68. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி.---மஹா பெரியவா
69. ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி
70. ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி


சந்திரஹாசம்

சந்திரஹாசம்-----
ராவணனுக்கு சிவனால் கொடுக்கப்பட்ட வாள். ப்ரம்மாவிடம் பல வரங்கள் பெற்று வரும் வழியில் கைலாசத்தை தூக்க முயற்சிக்க, சிவன் அழுத்த, அவன் ஆயிரம் ஆண்டுகள், சிவ நாமம் சொல்ல அவர் மகிழ்ந்து, இந்த வாளைக் கொடுத்தார். (உத்திர ராம).
ஆனால்சந்திரஹாசன் என்ற பெயரில் ஒருவன் இருந்தான் தெரியுமா? 
சந்திரஹாஸன்;-----சுதார்மிகன் என்பவருக்கு இவன் பிறந்தான் . இவன் பிறக்கும் போது கையில் ஆறு விரல்கள் இருந்தன .இது கெடுதல் என்று நாட்டு மக்கள் கூற இவன் தாய் தந்தையரைக் கொன்று, இவனைத் தூக்கி எறிந்தனர்.
பிறகு கௌண்டல நாட்டில் வசித்து வந்தான் . ஒரு நாள் அந்நாட்டு மந்திரி ( த்ரிஷ்டபுத்தி)யின் வீட்டில் ஒரு விருந்து நடக்க அங்கே இச்சிறுவனை கண்ட, சில முனிவர்கள் அவன் பிற்காலத்தில் அரசனாவான் எனக் கூற, இதை அறிந்த மந்திரி பணி ஆட்களிடம் இவனைக் கொல்வதற்கு ஆணையிட , அவர்கள் சந்திரஹாஸனின் ஆறாவது விரலை வெட்டி , விரட்டி விட்டனர்.
அவன் கலிந்த நாட்டை அடைந்தான். அந்நாட்டரசன் இவனின் மேதாவிலாசம் கண்டு, தன்னிடமே வைத்துக் கொண்டு,கல்வி கேள்விகளில் தேர்ந்த பின் அவனை அரசனாக்கினான். இதை அறிந்த த்ருஷ்டபுத்தி கலிந்த நாடு வந்து,இவனை தன் நாட்டரசனைச் சென்று பார்க்குமாறு கூற,அவனும் அதற்கு இசைந்தான். மந்திரி தன் மகனுக்கு (மதனா) ஒரு கடிதம் கொடுத்து இவனை க் கொல்லுமாறு எழுதியிருந்தான்.
ஆனால் வழியில் கௌண்டல நாட்டு இளவரசி சம்பகமாலினியும், த்ருஷ்டபுத்தியின் மகள் விசயாவும் இவனை காதலிக்க, அவர்கள் இவன் கொண்டு வந்த கடிதத்தை பார்க்க நேரிட்டது . பின் , கலங்கி,அதிலிருந்த"விஷம் கொடு" என்பதை மாற்றி"விசயாவை கொடு" என எழுதினர். அவ்வாறே மதனாவும் விசயாவைத் திருமணம் செய்து கொடுக்க, கௌண்டல நாட்டரசனும் தன் பெண் சம்பகமாலினியைக் கொடுத்தான்.
பிறகு த்ருஷ்டபுத்தி சந்திரஹாஸனைக் கொல்வடதற்கு வேறு திட்டமிட்டு , அதை வேறு விதமாகப் புரிந்துகொண்டு மந்திரி மகன் மதனாவைக் கொன்றனர். பிறகு தருமரின் அஸ்வமேதக் குதிரையை நிறுத்த, அர்ச்சுனனுடன் போரிட்டு விரட்ட, கிருஷ்ணன் வந்து சமாதானம் செய்தார். இவனுக்கு மகராக்ஷன், பத்மாக்ஷ்ன் என இரண்டு மகன்கள் இருந்தனர்.(ஜைமினி அஸ்வமேத பர்வ);;

நான்கு உபாயங்கள்--

அரசர்கள் தங்கள் ஆட்சியில் கையாண்ட நான்கு உபாயங்கள்--
சாம, தான, பேத, தண்டம்;; 
1)சாம-- நல்ல வார்த்தைகளால் இன்முகத்துடன் வரவேற்றல், நல்ல உபசரணை செய்து தன் வயப்படுத்துதல்,
2) தான- -ஐந்து வகைகள் --ப்ரீதிதான, த்ரவிய தான, ஸ்வயம்க்ராஹ, தேய, ப்ரதிமோஹ;; பல தரப்பட்ட மக்களை கவர் இந்த தான முறைகள் உதவும்.
3) பேத;; நண்பர்களை சூழ்ச்சி செய்து பிரித்தல், இரு தரப்புகளுக்கிடையே பகைமையை உருவாக்கிப் பிரித்தல். சந்தேகங்களை உருவாக்கிப் பிரித்தல், நல்ல நண்பர்களைப் பிரித்துத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளுதல்;
4) தண்ட--கொல்லுதல், செல்வத்தை அழித்தல், சித்ரவதை செய்து உடம்பின் உறுப்புகளை வெட்டுதல்;; கெட்ட நண்பர்கள், மந்திரிகள், சூழ்ச்சி செய்யும் அரசர்கள், விரோதிகளை இம்முறையில் அழிக்கவேண்டும்.
இதைத் தவிர,சில மாயா உபாயங்களும் உண்டு. மந்திர தந்திர சக்தியால் உருமாறுதல், மழை, நெருப்பு, மேகமூட்டம், இருட்டு உண்டாக்குதல் செய்து எதிரிகளை பயமுறுத்துதல்என்பன . இந்த இந்திர ஜாலங்களை சூரபதுமன் போன்ற அசுரர்கள் அறிவர்.

சனி, ஜனவரி 30, 2016

ஒரு சின்ன கதை.

ஒரு சின்ன கதை. அவர் ஒரு ஞானி. அவரைப் பல இடங்களில் தேடி அலுத்த ஒருவர் முடிவாக அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டார். அவசர அவசரமாக அவர் தங்கியிருக்கும் வீட்டின் கதவை அடித்தார். நெடுநாள் தேடிய எரிச்சல் மற்றும் பரபரப்பு காரணமாக வேகவேகமாக அவர் இருந்த வீட்டுக் கதவை டமால் என்று நெட்டித் தள்ளினார். பரபரப்புடன் வீட்டுக்குள் நுழைந்தவர் செருப்பைக் கழற்றும் பொறுமைகூட இன்றி இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கழற்றி விட்டு எறிந்தார். செருப்புகள், சுவரில் மோதி சரிந்து விழுந்தன. தட தட வென்று ஞானி இருந்த அறைக்குள் நுழைந்தவர் தடாலென அவரது காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுதார். தமக்கு வாழ்க்கை பற்றிய ஞானம் தரவல்ல குரு அவரே என்று கண்டறிந்ததாகப் பெரிதாக அலறினார்.
ஞானியோ அவரைச் சட்டை செய்யாது முகத்தைத் திருப்பிக் கொண்டார். மிகுந்த மதிப்போடு குருவைத் தேடிவந்த தம்மை அவமதிப்பது சரியா என்று ஞானியைக் கேட்டார் வந்தவர்.ஞானி தீர்க்கமாக வந்தவரை உற்று நோக்கினார். நீ எங்கு என்னை மதித்தாய்? உன்னை நான் எப்படி மனமார வரவேற்க முடியும். உன் செய்கைகளை நான் கவனித்துக் கொண்டேதான் இருக்கிறேன். அந்த வாசல் கதவுகளை நீ ஏன் அவமதித்தாய். அவை உனக்கு என்ன தீங்கு இழைத்தன? எவ்வளவு காலமாக இந்த வீட்டை அவை காவல் காத்து வருகின்றன. கடமையைச் சரியாக ஆற்றும் கதவுகளை நோகும்படி நெட்டித் தள்ளினாயே அது சரியா? உன்னை வெப்பத்திலிருந்தும் முள்ளிலிருந்தும் பாதுகாத்த செருப்புகளை எவ்வளவு அலட்சியமாக விட்டெறிந்தாய்? பண்பாடற்றவன் நீ! நன்றி இல்லாதவன் நீ! அந்தச் செருப்புகள் சுவரில் முட்டிய போது அவை எவ்வளவு அவமானப்பட்டிருக்கும் என்பது உனக்குத் தெரியுமா? எவ்வளவு வலியை உணர்ந்திருக்கும் தெரியுமா? போ… போய்… செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டு விட்டு வா… அதன்பிறகு வேண்டுமானால் உன்னோடு பேசுகிறேன்” என்றார் ஞானி.
உங்களுக்கென்ன பைத்தியமா? செருப்புக்கும் கதவிற்கும் உயிருண்டா என்ன? அவற்றிடம் மன்னிப்பு கேட்க… என்றார் வந்தவர்.உன் கோபத்தை அவற்றின் மீது காட்டும் போது அவற்றை உயிருள்ளவை போல நினைத்துத் தானே காட்டினாய். அப்போது உயிருள்ளவை போல நடத்தலாம் என்றால் மன்னிப்பும் கேட்கலாம் தப்பில்லை… போ… போய் உன் தவறுக்காக செருப்புகளிடமும் கதவுகளிடமும் மன்னிப்பு கேள்” என்றார் ஞானி.
வந்தவருக்கோ ஞானியிடம் காரியம் ஆக வேண்டும். ஞானியைத் திருப்தி செய்வதற்காகவாவது மன்னிப்புக் கேட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாகச் செருப்புக்களிடமும் கதவுகளிடமும் மன்னிப்பு வேண்டினான். ஆனால், அப்படி கேட்கும்போதே தன் மனத்தில் இதுவரை இருந்த க்ரோதம், பாரம் குறைவதை உணர்ந்தான். தான் பாரமான மண்ணாக இருந்ததில் இருந்து லேசான ஆகாயமாக மாறியதை அனுபவித்தான். அவனுக்கு ஆனந்தக் கண்ணீர் வரத் தொடங்கியது.
முற்றிலும் வித்தியாசமானவனாக வந்து ஞானியை வணங்கினான். ஞானி அன்புடன் மகனே. என்று அழைத்து இறுகத் தழுவினார். யாரோ பூமழை பொழிவதுபோல் இருந்தது.

அஷ்டாவக்ர கீதை.

அஷ்டாவக்ர கீதை. ------- இது ஜனக மன்னருக்கும், அஷ்டாவக்ர முனிவருக்குமிடையில் நடந்த சம்பாஷணையில் வெளிப்பட்ட தத்துவக் கருத்துக்கள் ஆகும் .
முன்னொரு காலத்தில் ஜனக மன்னர் தனது அரசவையில் தனது ஆஸ்தான பண்டிதருடன் அப்பியாசத்தில் ஈடு பட்டிருந்தார். அப்போது ஒரு புராதன வேதாந்த சாஸ்திரத்தில்-
“குதிரையேறும் ஒருவன் சேணத்தின் ஒரு சுவட்டில் காலூன்றி, மற்றொன்றில் கால் எடுத்து வைக்கும் நேரத்திற்குள் ப்ரும்ம ஞானம் உறலாம்” -
எனும் மஹா வாக்யம் இருந்தது. இமைப்பொழுதில் ஞானம் அடையலாம் என்பதே அதன் தாத்பர்யமாக இருந்தது. ஜனக ராஜாவால் அந்த வசனத்தைக் கடக்க முடியவில்லை.
பண்டிதரிடம் " குதிரை கொண்டு வரச் சொல்லட்டுமா?” என்று நேரடியாக அந்த வசனத்தின் நிரூபணத்தை அறிய ஆவல் கொண்டு வினவினார் மன்னர். அவருடைய ஆர்வத்தைக் கண்டு வெருண்ட பண்டிதரோ, அந்த ஞானானுபவத்தை நிரூபிப்பது தன்னால் முடியாதது என்று மறுத்தார்.
“ அப்படியென்றால் அந்த வசனம் பொய்யானதாக இருக்கவேண்டும். அல்லது மிகைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்” என்று வாதிட்டார் மன்னர்.
“ என்னால் நிரூபிக்க இயலாத பெரும் ஞானமென்பதால், பெரியோரின் வாக்கு பொய்யானதாக எப்படி இருக்க முடியும்?” என்று பதிலளித்தார் பண்டிதர்.
மன்னர் அந்த பதிலால் த்ருப்தியடையவில்லை. அந்தப் பண்டிதரைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டதோடு நிற்காமல், நாட்டின் அத்தனை பண்டிதர்களையும் ஒவ்வொருத்தராகப் பரிசோதித்து, பதில் கிடைக்காது போகவே யாவரையும் சிறையில் இட்டார். நாட்டின் சான்றோர்கள் எல்லோரும் சிறைப்பட்டு, நாடே துயரத்தில் வீழ்ந்தது.
இந்தக் கட்டத்தில், வயதில் சிறியவரும் அறிவில் மூத்தவருமான ஒருவர் ,ஜனக ராஜனின் நாட்டில் காணப்பட்டார். தோற்றத்தில் எட்டுக் கோணலுடன் தென்பட்டதால் அவர் அஷ்டவக்ரர் என்று அழைக்கப்பட்டார். அந்த நேரத்தில் அரசனின் சந்தேகத்துக்கு நிரூபணம் அளிக்க முடியாமல் எல்லாப் பண்டிதர்களும் சிறைப் படுத்தப்பட்டிருப்பதை அறிந்தார்.
நேராக அரசனைச் சந்தித்து, சிறைப்படுத்தப்பட்டிருக்கும் எல்லோரையும் விடுவித்து, அவரின் சந்தேகத்தைத் தீர்த்துவைப்பதாகவும் அந்த மக்களிடம் சொல்லவே அவரை ஒரு பல்லக்கில் சுமந்து அரண்மனைக்கு ஜனக மன்னனைச் சந்திக்க அழைத்துப் போனார்கள்.
ஜனகருக்கும் அவரின் உறுதியைக் கண்டு அவரால் நிச்சயம் தன் ஐயத்தைத் தீர்த்துவைக்கமுடியும் என்று தோன்றவே, சிறைப்பட்ட எல்லோரையும் விடுவிக்க உத்தரவிட்டார்.
ஜனகருக்கு அதற்கு மேலும் பொறுமையில்லை. அடுத்த நொடியே அஷ்டாவக்ரரிடம், “குதிரையைக் கொண்டு வரச் சொல்லவா?” என்று ஆவலுடன் கேட்க, சிரித்தபடியே, “ அரசே! அவசரப்படவேண்டாம். நாம் இருவருக்கும் யாருமற்ற தனிமைதான் இப்போது தேவை. அங்கே உமக்கு அறிந்துகொள்ள வேண்டிய உண்மையை உரைப்பேன்” என்றார்.
ஒரு பல்லக்கில் அஷ்டாவக்ரரும், அரசன் குதிரையிலுமாக எல்லோரும் சூழக் காட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். வனத்தை அடைந்ததும் அரசரிடம், ”உடன் வந்த பரிவாரங்கள் அனைத்தையும் திரும்பிப் போகச் சொல்லுங்கள். நாம் இருவர் மட்டும் தனித்திருக்கலாம்” என்று வேண்டிக்கொண்டார்.
மன்னனும் எல்லோரையும் அனுப்பிவிட்டு, குதிரையின் சேணத்தில் ஒரு காலும், தரையில் மறுகாலுமாக தயாராக நின்றபடி, “இன்னும் தாமதிக்கவேண்டாம் முனிவரே! உண்மையை எனக்கு அருளத் தயை புரிய வேண்டும்” என்றார்.
அஷ்டாவக்ரர் அமைதியுடன், “அரசே! நீங்கள் அறிய விரும்பும் இந்த உண்மை, குருவினால் ஒரு சீடனுக்கு அருளப்பட வேண்டியது என்று கூறப்பட்டுள்ளது! நாம் இருவரும் அப்படி சம்பந்தப்பட்டிருக்கிறோம் என்பது உண்மைதானா?” என்று கேட்டார்.
ஜனகரும் முனிவரை வணங்கி,” நானே உங்கள் சீடன். அருள் புரியுங்கள்” என்றார். மறுபடியும் முனிவர்,” ஜனகா! உண்மையான சீடன் என்பவன் தன்னையும், தன் உடமைகளையும் குருவுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமே?” என்று கேட்டார்.
ஜனகரும், “அப்படியே அர்ப்பணிக்கிறேன்” என்று தன்னையும், தன் உடமைகளையும் அர்ப்பணம் செய்தார். அஷ்டவக்ரரும், “அப்படியே இருப்பாயாக” என்று சொல்லி, அடுத்த கணம் மறைந்து போனார்.
ஜனகர்மரம் போல அசையாமல் அப்படியே நின்றார். சூரியன் மறையும் வரையும், மறைந்த பின்னும் அந்த இடத்திலேயே முனிவருக்கு அர்ப்பணித்தபடியே நின்றுகொண்டிருந்தார்.
நீண்டநேரத்துக்குப் பின்னும் அரசன் திரும்பவில்லையே என்ற கவலை கொண்ட அரசனின் பரிவாரங்கள் அவரைத் தேட ஆரம்பித்தார்கள். காட்டுக்குள் மரம் போல நிற்கும் அரசரைக் கண்டு திடுக்கிட்டார்கள்.
மன்னரோ தன்னைச் சுற்றியிருந்தவர்களையோ, அவர்களின் கேள்விகளையோ கவனித்தவராய் இல்லாமல் அப்படியே உறைந்திருக்க, மக்கள் வேதனையுடன் அஷ்டாவக்ரரைத் தேடினார்கள். அவரையும் காணாது போகவே, பெருத்த கோபமும், ஏமாற்றமும் சூழ அந்தக் கோலத்திலேயே மன்னனைப் பல்லக்கில் ஏற்றி, அரண்மனைக்குத் தூக்கி வந்து பள்ளியணையில் படுக்க வைத்தார்கள்.
மறுநாள் விடியலும் ஏமாற்றம் அளித்தது. மன்னனிடம் ஒரு மாறுதலும் தென்படாதது கண்டு, அஷ்டாவக்ரர் ஒரு மாயாவியாய் இருக்கக்கூடும் என்றும், அவரைத் தேடிக் கண்டுபிடித்து சிறையில் அடைக்கவேண்டும் என்றும் மந்திரிமார்கள் முடிவுசெய்து, அவரைத் தேடிக் கண்டுபிடிக்க நாட்டின் எல்லாப் பாகங்களுக்கும் தூதர்களை அனுப்பினார்கள்.
அன்றைய நாள் முடிந்து, இரவு பிறந்த வேளையில் அஷ்டாவக்ரர் தென்பட்டார். அவரைத் தூதர்கள் அரசவைக்குக் கூட்டிவந்தார்கள்.
முதன்மந்திரிக்கு அவரைக் கண்டதும், கட்டுக்கடங்காத கோபம் வந்தாலும், காரியம் கெட்டுவிடக் கூடாது என்று தன் கோபத்தை அடக்கிக்கொண்டு நடந்ததை எல்லாம் விபரமாக அஷ்டாவக்ரரிடம் எடுத்துச் சொல்லி, “மன்னரை மறுபடியும் சுயநினைவுள்ளவராக ஆக்கவேண்டும். அரசரின் இந்த நிலைக்குத் தாங்கள்தான் காரணம். கண்டிப்பாகக் காட்டில் என்ன நடந்தது என்று எங்களுக்குச் சொல்ல வேண்டும். ” என்று கேட்டார்.
அஷ்டாவக்ரர் “ஜனகா” என்று கூப்பிடவும், “ஸ்வாமி! வரவேண்டும்” என்று வணங்கினார் மன்னர்.
அமைச்சர்களுக்கு பலத்த ஆச்சர்யம்.
“ஜனகா! நான் உன்னைப் பரிதாபமான நிலமைக்குக் கொண்டுவந்து விட்டதாகவும், நான்தான் உன்னைப் பழைய நிலைக்குக் கொண்டு வரவேண்டுமென்றும் சொல்கிறார்களே? இது உண்மைதானா? நீயே சொல்!” என்றார்.
“யார் அப்படி அபாண்டமாகச் சொன்னது? சொல்லுங்கள்” என்று வெகுண்டார் மன்னர்.
அரசனின் கோபத்தைக் கண்டு அரசவையே நடுங்கிற்று. அஷ்டாவக்ரரிடம், அரசரை எப்படியாவது சகஜ நிலைக்கு மீட்டுத் தாருங்கள் என்று விண்ணப்பித்தார்கள்.
“அப்படியானால் நீங்கள் அனைவரும் வெளியேறுங்கள். மன்னனுடன் நான் தனியாக இருக்கவேண்டும்” என்றார் அஷ்டாவக்ரர்.
எல்லோரும் சென்றபின் அஷ்டாவக்ரர் , “ஜனகா! நீ எப்படி இருக்கிறாய்? என்ன நடந்தது? வழக்கம் போல இல்லையே நீ?” என்று கேட்டார்.
“முனிவரே! நான் என்னையே உங்களுக்கு அர்ப்பணித்துவிட்டேன். உங்கள் ஆணைப்படி இனி நடப்பேன்” என்று சொல்ல அஷ்டாவக்ரரும், “ ப்ரும்ம ஞானம் என்பது நன்கு பக்குவம் பெற்றவர்களுக்கே உபதேசிக்க உகந்தது. இதுவரை நான் உன்னை சோதித்தேன். இரவு உணவுக்குப் பின் நாம் சந்திக்கலாம்” என்று சொல்லி, தனது கிரமங்களை முடித்துத் திரும்பினார்.
ஜனகரின் அந்த இரவு அதற்கு முந்தைய இரவுகளைக் காட்டிலும் அர்த்தம் பொதிந்திருந்தது.
“ ப்ரும்ம நிலை, அதை அடையும் வழி யாது?” என்ற ஜனகரின் கேள்விக்கு, “ப்ரும்மம் என்பது நீயே அன்றி வேறில்லை. அதை உணர தேசம், காலம் எதுவும் இல்லை. அது எதுவோ அதுவே நீ. அதுவே எல்லையில்லா பரிபூர்ண ஆத்மா” என்று உபதேசித்தார்.
அன்றிரவு முழுவதும் அவ்விருவருக்கும் நடுவே இடம்பெற்ற உரையாடல்களே அஷ்டாவக்ர கீதையாய்ப் பரிணமித்தது.
மறுநாள் மன்னர் இயல்பாய்த் தன் அரசவைக்கு வந்து, தன் அலுவல்களில் ஈடுபட்டதைக் கண்டு அனைவரும் மகிழ்வுற்றனர்.
அஷ்டாவக்ரரும், “கண நேரத்தில் ஞானம் உறுவது குறித்த உன் சந்தேகம் தெளிவு பெற்றதா? உன் அனுபவத்தைக் கற்றறிந்த இந்த சபையோருக்குச் சொல்” என்று வேண்டினார்.
ஜனகரும், “ என் முதிர்ச்சியின்மையினாலேயே சாஸ்த்ர வாக்யத்தைத் தவறாய்ப் புரிந்துகொண்டேன். உங்களால் நான் தெளிவுபெற்றேன். அந்த வாக்யத்தின் ஒவ்வொரு எழுத்தும் உண்மையே” என்று ஒப்புக்கொண்டார்.

திருவள்ளுவர் எழுதிய நூல்கள்

திருவள்ளுவர் எழுதிய நூல்கள் தெரியுமா?. மேலும் தெரிந்தால் இணைக்கவும் 
திருவள்ளுவர், திருக்குறள் உட்பட 16 மேற்பட்ட நூல்களை எழுதி யுள்ளார். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்
1. ஞானவெட்டியான் – 1500 
2. திருக்குறள் – 1330
3. ரத்தினச்சிந்தமணி – 800
4. பஞ்சரத்தினம் – 500
5. கற்பம் – 300
6. நாதாந்த சாரம் – 100
7. நாதாந்த திறவுகோல் – 100
8. வைத்திய சூஸ்திரம் – 100
9. கற்ப குருநூல் – 50
10. முப்பு சூஸ்திரம் – 30
11. வாத சூஸ்திரம் – 16
12. முப்புக்குரு – 11
13. கவுன மணி – 100
14. ஏணி ஏற்றம் – 100
15. குருநூல் – 51
16. சிற்ப சிந்தாமணி (ஜோதிட நூல்)

நீட்டலளவு

நீட்டலளவு
**********
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

சித்தர்கள் வகுத்த தமிழ் எண் வடிவங்கள்

சித்தர்கள் வகுத்த தமிழ் எண் வடிவங்கள்
தமிழ் எண்கள்
* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

இறங்குமுக எண்கள்

இறங்குமுக எண்கள்
*****************
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

திங்கள், ஜனவரி 25, 2016

அமிர்த கரைசல்


பச்சை பசுஞ்சாணம் -10kg
பசுவின் கோமியம் -10லிட்
நாட்டு சர்க்கரை -250g
தண்ணீர் -100lit
இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும்.இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம்.அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.பாசன நீருடன் கலந்து விட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும்.தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும்.இது மண்ணின் வளம் மற்றும் நலத்தையும் கூட்டி பயிர்கள அனைத்திற்கும் நன்மை பயக்கும்.
பிரம்மாஸ்திரா
மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம்.
அக்னி அஸ்திரம்
புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
சுக்கு அஸ்திரா
சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசு அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சானக் கொல்லியாகும். இதை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.
பீஜாமிர்தம்
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.
ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம்.
கனஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும்.
நீம் அஸ்திரா
நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
மீன் அமினோ அமிலம்
‘மீன் அமிலம்’ தயாரிப்பது மிகவும் எளிது. மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும் செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து… நன்கு பிசைந்து… ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியே ‘மீன் அமிலம்’. 10 லிட்டர் நீருக்கு 100 கிராம் (மில்லி) கலந்து பயிரில் தெளித்தால், பயிர் பச்சை கொடுத்து செழித்து வளர்கிறது