வெள்ளி, பிப்ரவரி 26, 2016

நிழல் தந்த போதனை!


=====================
செல்வந்தர் ஒருவர், ஒரு ஞானியைச் சந்தித்து, ""நான் இத்தனை ரூபாய் செலவழித்து இந்த இந்த தானங்கள் செய்துள்ளேன். இதற்கு என்ன பலன் கிடைக்கும்?'' என்று கேட்டார்.
செல்வத்தால் புண்ணியத்தையோ மோட்சத்தையோ விலைக்கு வாங்க முடியாது என்பதை செல்வந்தருக்கு உணர்த்த எண்ணிய ஞானி, அவரைப் பகல் வேளையில் தன்னைப் பார்க்க வருமாறு சொன்னார்.
மறுநாள் மதியவேளை, செல்வந்தர் அவரைப் பார்க்க வந்தார். அவருடன் ஞானியும் நடக்க ஆரம்பித்தார். வெயில் அதிகமாக இருந்த நேரம் அது. செல்வந்தருடைய கால்களுக்கு வெயிலைத் தாங்கும் சக்தியில்லை. மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தார்.
செல்வந்தரின் நிலையைக் கண்ட ஞானி, ""அன்பரே, தங்கள் நடையில் ஏன் வேகம் குறைகிறது?'' என்று கேட்டார்.
""வெயில் காலைச் சுடுகின்றது. சூடு தாங்க முடியவில்லை...'' என்றார் அவர்.
உடனே ஞானி, ""உங்களது நிழல் தரையில் விழுகிறதே, அதிலேயே நடக்கலாமே...'' என்றார்.
செல்வந்தரும் தனது நிழலின் மீது கால்களை ஊன்றி நடக்க எவ்வளவோ முயன்றார். ஆனால் நிழல் நகர்ந்து நகர்ந்து சென்றதால் அவரால் முடியவில்லை. பலவாறு முயன்றும் அவரால் தனது நிழலில் நடக்க முடியவில்லை.
ஞானி சிரித்தார். செல்வந்தர், ""எதற்காக சிரிக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
"உங்களின் நிழலே உங்களுக்கு உதவவில்லை. நீங்கள் சேர்த்துள்ள செல்வம் எப்படி உங்களுக்குப் புண்ணியம் கிடைக்க உதவும்?'' என்று கேட்டார் ஞானி.
உண்மையை உணர்ந்து கொண்டார் செல்வந்தர்.
-த.ஜெகன், சரலூர்.

...........ஓரெழுத்து ஒருமொழி..........


=================================================== 
தமிழில் ஒரே எழுத்து மட்டும் உள்ள சொற்கள் அறுபதுக்கும் மேலுள ! அவற்றைக் காண்போமா !!! 
================================================== 
1) அ - அழகு, சிவன், திருமால், திப்பிலி 
2) ஆ - மாடு. அற்பம், மறுப்பு, துன்பம் 
3) இ – அண்மைச் சுட்டு 
4) ஈ - அம்பு, அழிவு..ஒரு சிற்றுயிர், கொடு 
5) உ – சுட்டெழுத்து, சிவன், உமை, நான்முகன் 
6) ஊ - ஊன், இறைச்சி.உணவு, திங்கள், தசை 
7) எ – வினாவெழுத்து, 7 என்பதன் குறி 
8) ஏ - ஏவுதல், அம்பு. இறுமாப்பு, மேல் நோக்கல் 
9) ஐ – நுண்மை,, அழகு.அரசன், இருமல், குரு, கோழை 
10) ஓ –ஒழிவு, மதகுப் பலகை. கொன்றை, உயர்வு,நினைவு 
11) ஔ – நிலம், விளிப்பு, கடிதல், 
12) க - நெருப்பு.,அரசன், நான்முகன், காற்று, காமன், மனம் 
13) கா – சோலை, காத்தல், காவடி, வருத்தம், வலி, துலை 
14) கு - பூமி, குற்றம், சிறுமை, தடை, நிறம், நீக்கம் 
15) கூ – கூவு, நிலம், பூமி 
16) கை – கரம், இடம், உடனே, ஒழுக்கம், சேனை, ஆள், ஆற்றல் 
17) கோ - அரசன்,அம்பு, ஆண்மகன், கண், எருது, பசு, பூமி, கோத்தல் 
18) கௌ - 'கௌவு' என்று ஏவுதல்.,கொள்ளு, தீங்கு 
19) சா - இறத்தல், 'சாவு' என்று ஏவுதல், பேய், சோர்தல் 
20) சீ – அடக்கம், அலட்சியம், ஒளி, கலைமகள், பெண், விந்து, துயில் 
21) சூ – சுளுந்து, வாண வகை, விரட்டும் ஒலிக்குறிப்பு, நாயை ஏவுதல் 
22) சே - சிவப்பு., இடபராசி, அழிஞ்சில் மரம், எருது, காளை, 
23) சோ - மதில்.அரண், உமை, வாணாசுரன் நகர் 
24) ஞா – கட்டு, பொருந்து 
25) த – குபேரன், நான்முகன் 
26) தா – கொடு, அழிவு, குற்றம், கேடு, தாண்டு, பகை, வலி, 
27) தீ – நெருப்பு, அறிவு, இனிமை, கொடுமை, சினம், நஞ்சு 
28) து – எரித்தல், கெடுத்தல், வருத்தல், வளர்தல், ”உண்” என ஏவல் 
29) தூ – தூய்மை,தசை, பகை, பற்றுக்கோடு, வெண்மை, வலிமை 
30) தே – கடவுள், அருள், கொள்ளுகை, நாயகன், தெய்வம் 
31) தை -, தைத்தல், தை மாதம், பூச நாள், மகர இராசி, ஒப்பனை
32) ந – இன்மைப் பொருள், மிகுதிப் பொருள் உணர்த்தும் எழுத்து 
33) நா - நாக்கு, அயல், அயலார், திறப்பு, பொலிவு, சுவாலை 
34) நீ - முன்னிலை ஒருமைப் பெயர் 
35) நு – தோணி, நிந்தை, நேரம், புகழ் 
36) நூ - எள், யானை, அணிகலன், தள்ளு, தூண்டு, அசை, 
37) நே – அன்பு, அருள், நேயம் 
38) நை – நைதல், கெட்டுப்போதல், வருந்துதல், நசுங்குதல், வாடல் 
39) நொ – துன்பம், நோய், வருத்தம், தளர்வு, நொய்ம்மை 
40) நோ – வலி, சிதைவு, துக்கம், துன்பம், நோய், வலுவின்மை 
41) நௌ - மரக்கலம், கப்பல். 
42) ப – காற்று, பெருங்காற்று, சாபம், 1/20 - என்பதன் குறி 
43) பா - பாடல்,அழகு, நிழல், பரப்பு, பரவு, தூய்மை, பாம்பு 
44) பி - அழகு. 
45) பீ – மலம், தொண்டி அச்சம். 
46) பூ - மலர், அழகு, இடம்,இலை, கூர்மை, பூமி, பொலிவு, மென்மை 
47) பே – அச்சம், நுரை, மேகம், இல்லை எனும் பொருள் தரும் சொல் 
48) பை – பசுமை, அழகு, இளமை, நிறம், பாம்பின் படம், பொக்கணம், 
49) போ - 'செல்' என்று ஏவுதல். 
50) ம – இயமன், காலம், நிலா, சிவன், நஞ்சு, நேரம் 
51) மா – ஒரு மரம், அழகு, அளவு, அறிவு, ஆணி, மாவு, மிகுதி, வயல் 
52) மீ – ஆகாயம், உயர்ச்சி, மகிமை, மேற்புறம், மேலிடம் 
53) மூ – மூன்று, மூப்பு, 
54) மே – மேன்மை, மேம்பாடு, அன்பு 
55) மை - இருள், எழுது மை, கறுப்பு, குற்றம், நீர், மலடி, மேகம் 
56) மோ – மூக்கினால் மோந்து பார்த்தல் 
57) யா - 'யாவை' , ஐயம், அகலம், கட்டுதல், பாடல் யாத்தல் 
58) வா - 'வா' என்று அழைத்தல். 
59) வி - விசை, அதிகம், ஆகாயம், கண், காற்று, திசை, பறவை,அழகு 
60) வீ - பறவை, நீக்கு, கொல், பூ, விரும்பு, போதல், பூந்தாது 
61) வே – (கூரை) வேய்தல், வேவு பார்த்தல் 
62) வை - 'வை' என்று ஏவுதல், வைக்கோல், கூர்மை, வையகம் 
====================================================== 
நன்றி: முகநூல் - தமிழ்ப் பணி மன்றம் - 
Vaidyanathan Vedarethinam

வியாழன், பிப்ரவரி 04, 2016

ராம ஜபத்தின் மகிமை ….


ராம ஜபத்தின் மகிமை …..
ஒரு நாள் சக்கரவர்த்தி அக்பர் வேட்டைக்காக ஒரு பரந்த வனத்திற்குள் சென்றார்.
அவருடன் மந்திரி பீர்பாலும் சென்றார். ஆனால் காட்டுக்குள் சென்றவர்களுக்கு வழி
தவறிப் போனது. கொடும் வனம், அதைவிட கொடிய பசி இருவரையும் வாட்டி வதைத்தது.
ஆனால் பீர்பாலோ அடர்ந்த வனத்தின் அழகில் மனதை பறிகொடுத்து விட்டார். உடனே ஒரு
பெரியமரத்தின் கீழ் அமர்ந்து “ராம ராம” என்று ராம நாம ஜபத்தை ஜபிக்கத்
தொடங்கினார்.
அக்பர் பசி தாங்க முடியாமல் பீர்பாலை நோக்கி, ஏதாவது உணவை சேகரித்துக் கொண்டு
வாருங்கள். நிச்சயம் சிறிது தூரம் போனால் ஏதாவது வழி தென்படும் என்று கூற,
பீர்பாலோ, அரசே என் வயிறோ உணவிற்கு ஏங்குகிறது. ஆனால் மனமோ ராம நாமத்திற்கு
ஏங்குகிறது. அதனால் மன்னா இப்போது நான் உணவைப் போய் சேகரிக்கும் நிலையில்
இல்லை என்று பதிலளித்தார்.
**இதைக் கேட்டு சினம் கொண்ட அக்பர் தானே உணவை தேடிக் கொண்டு போனார். அவர்
எதிர்பார்த்தது போலவே தொலைவில் ஒரு வீடு தென்பட விரைந்து சென்ற சக்கரவர்த்தி
அக்பரை மனம் மகிழ்ந்து வரவேற்று, அறுசுவை உணவளித்து உபசரித்தனர் அவ்வீட்டினர்.*
***அக்பரும் மனம் கேளாமல் பீர்பாலிற்காகவும் உணவைக் கேட்டுப் பெற்று காட்டில்
மரத்தடியில் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தவரை அணுகி அதை கொடுத்துவிட்டு
ஏளனத்தோடு கேட்டார். “பீர்பால், இப்போதாவது தெரிந்ததா, நான் எடுத்த சரியான
முடிவால் தான் இன்று உமக்கு உணவு கிடைத்தது. நீங்கள் ஜபித்துக்
கொண்டிருக்கிறீர்களே இந்த ராமஜபம், அதுவா உங்களை பசியாற்றியது?”****இதற்கு
உணவைப் புசித்து முடித்து விட்டு அமைதியாக பீர்பால், ‘அரசே ! உணவிற்காக
மகாபெரிய சக்கரவர்த்தியான தாங்கள் ஒரு சாதாரண பிரஜையிடம் யாசிக்க நேர்ந்தது.
ஆனால் என் பிரபு ராமரோ எனக்கு உணவை மாமன்னரான உங்கள் கையில்
கொடுத்தனுப்பியுள்ளார். இதுதான் ராம ஜபத்தின் மகிமை’ என்று கூற, அக்பர்
வாயடைத்துப் போய் நின்றார்.****~

திங்கள், பிப்ரவரி 01, 2016

வேற்றுமை காட்டாதீர்கள்...

..........................................
வேற்றுமை காட்டாதீர்கள்...
...............................................
விமானத்தில் பெண் ஒருவள் ஒரு ஆப்பிரிக்காரரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத்துவேசியான அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து',
நீக்ரோ'வின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும், தனக்குப் பிரிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டாள்.
ஆனால், விமானம் முற்றிலுமாக நிரம்பி விட்டது என்றும்,
முதல் வகுப்பில் இடம் இருந்தால் ஒதுக்கித் தருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றாள் பணிப்பெண்.
இந்நிகழ்வை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த மற்ற பயணிகள், குறித்த பெண்ணின் பண்பாடற்ற நடத்தையை மாத்திரமன்றி,போதாக்குறைக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யப்போவதை இட்டும் கடிந்து கொண்டனர்.
அந்த அப்பாவி ஆப்பிரிக்கரோ நடக்கும் நிகழ்வால் அதிர்வுற்றிருப்பினும் அமைதியாக இருப்பதற்கு முடிவு செய்து கொண்டார்.
பெண்ணோ முதல் வகுப்புக்கு செல்லப்போகும் மகிழ்ச்சியில் பணிப்பெண்ணின் வருகையை எத்ர்பார்த்திருந்தாள்.
சில நிமிடங்களுக்குப் பின் திரும்பிய பணிப்பெண் குறித்த பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டவளாக,
"முதல் வகுப்பில் ஒரு இடம் உள்ளது, இந்த விபரத்தை அறிந்து கொள்வதற்கு சற்று நேரம் செலவாகியது, அதன் பிறகு இடமாற்றத்திற்கு விமானியிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது,
விமானியும் "எமது விமானத்தில் எந்த ஒருவரும் தொந்தரவு தரும் ஒருவரின் அருகில் அமர வேண்டிய கட்டாயமில்லை" என்று கூறி விட்டு இடமாற்றத்திற்கு அனுமதி தந்தார்."
என்று கூறி முடித்தாள்.
சக பயணிகளுக்கு அங்கு நடப்பவற்றை உண்மையில் நம்ப முடியவில்லை. குறித்த பெண்ணோ இறுமாப்பில் ஒரு அசட்டுச் சிரிப்போடு முதல் வகுப்பிற்குச் செல்வதற்காக தனது இடத்தை விட்டு எழத் தயாரானாள்.
சரியாக அச்சமயம் பணிப்பெண் நீக்ரோ மனிதனைப் பார்த்து,
''சார்,தங்களுக்காக முதல் வகுப்பில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்குச் செல்வதற்காக தயாராகுங்கள்.
விமானியவர்கள், எமது நிறுவனத்தின் சார்பாக உங்களிடமிருந்து, இவ்வாறான விறும்பத்தகாத நிகழ்வுக்குக் காரணமான ஒருவரின் அருகில் அமர நிர்ப்பந்திக்கப் பட்டமைக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றார்." என்று கூறி அந்த மனிதரிடம் தன்னைப் பின் தொடருமாக கேட்டுக் கொண்டாள்.
குறித்த பெண்ணோ அசடுவழிய பணிப்பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சக பயணிகள் பிரச்சிணையை சமயோசிதமாக, அழகிய முறையில் தீர்த்து வைத்த பணிப்பெண்ணைப் பாராட்டினர்.
அந்த வருடம் குறித்த பணிப்பெண்ணும். தலைமை விமானியும் நிறுவனத்தின் அதியுயர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கீழ் வரும் வாசகம் நிறுவனத்தின் அணைத்து அலுவலகங்களுக்கும் ஊழியர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
"மனிதர்கள் அவர்களுக்கு என்ன சொன்னீர்க்கள்
என்பதை மறந்து விடுவார்கள்,
என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்து விடுவார்கள்,
ஆனால் எவற்றை அவர்களுடைய உள்ளங்களில் பதித்து
விட்டீர்களோ அவற்றை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்''....