வெள்ளி, அக்டோபர் 16, 2015

மனிதகுல வரலாற்றுக் குறுக்கு வெட்டுத் தோற்றம்

துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு’ என்றொரு மொழிபெயர்ப்பு நூல் வந்ததை அறிவீர்கள். ஆங்கிலத்தில் ஜாரட் டைமண்ட்’ எழுதிய Guns, Germs, and Steel எழுதிய நூலின் தமிழாக்கம். பாரதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பதின்மூன்றாயிரம் ஆண்டுகளின் மனிதகுல வரலாற்றுக் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை இந்நூல் நேர்க்கள ஆய்வுகளின் அடிப்படையில் விவரிக்கின்றது.
வெவ்வேறு கண்டங்களின் வரலாறுகள் ஏன் வெவ்வேறாக இருக்கின்றன ? ஐரோப்பியர்களைப்போல் ஏன் இன்கா இனமக்கள் உலகைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தவில்லை ? ஏன் ஐரோப்பாவுக்கு அருகில் இருந்தும் ஆப்பிரிக்கா ஓர் இருண்ட கண்டமாகவே இருந்தது ? இக்கேள்விகளுக்கு விடை கூற முயல்கிறது இந்நூல். இக்கேள்விகளுக்கு நூலில் நுவலப்பட்டுள்ள காரணங்களாய் நான் உணர்ந்தவற்றைக் கூறுகிறேன்.
1. ஐரோப்பியர்கள் நாடு பிடிப்பதற்காகக் கிளம்பிய ஆயிரத்து ஐந்நூறாம் ஆண்டுகள்வரை கடுமையான போர்களில் ஈடுபட்டனர். பிறரை அடிபணியச் செய்வோராக வரலாறு முழுக்க வாழ்ந்தவர்கள். அதே காலத்தில் உலகின் பிற கண்டத்து மக்கள் வளமான அமைதியான வாழ்வில் திளைத்திருந்தனர்.
2. விலங்குகளைப் பழக்கும் கலை ஐரோப்பியர்களிடம் முழு வளர்ச்சியடைந்திருந்தபோது இன்கா இனமக்கள் மலையாடு போன்ற ஒரு விலங்கை மட்டுமே வீட்டு விலங்காக்கி வைத்திருந்தனர் (எந்திரன் படத்தில் கிளிமாஞ்சாரோ பாட்டில் தோன்றுகின்ற ஆடு போன்ற விலங்கு). அப்போது ஐரோப்பியர்கள் பதின்மூன்று விலங்குகளைப் பழக்கிப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துவிட்டனர். இன்கா அரசனைக் காணச் சென்ற ஸ்பானிய தூதன் குதிரைமேல் அமர்ந்து சென்றானாம். ஒரு விலங்கின்மேல் மனிதன் அமர்ந்து செல்லும் காட்சியை இன்கா பழங்குடியினர் அப்போதுதான் முதன்முதலாகப் பார்த்திருக்கின்றனர்.
3. ஐரோப்பாக் கண்டம் கிழக்கு மேற்காகப் பரந்திருந்ததால் ஒருமுனையிலிருந்து மறுமுனை வரை ஒரே தட்பவெப்பம்தான். அதனால் அவர்கள் எளிதில் இடம்பெயர்ந்து அறிவைச் சேகரித்து வந்தனர். போர்க்கலையில் வல்லவராயினர். பிற கண்டங்கள் வடக்கு தெற்காக இருந்தன. அக்கண்டத்து மக்கள் இடம்பெயர்ந்தால் வெவ்வேறு தட்பவெப்பங்களுக்கு இலக்காகி மடிய வேண்டியதுதான். அதனால் அவர்கள் ஓரிடத்திலேயே நிலைத்து வாழத் தலைப்பட்டனர்.
4. பயிர்த்தொழிலுக்கு விலங்குகளையும் கோடரிகளையும் பழக்கியது ஐரோப்பியர்களின் முன்னேற்றம். ஆனால், அமெரிக்க ஆஸ்திரேலியப் பழங்குடிகள் கடந்த சில நூற்றாண்டுகள்வரை உடல் உழைப்பால் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர்.
5. ஐரோப்பாவும் ஆசியாவும் யூரேசியா என்ற ஒரே நிலப்பரப்பாய் இருந்ததால் இங்கே கண்டுபிடிக்கப்பட்ட பலவும் கொடுக்கல் வாங்கலுக்கு உள்ளாகின. பிற நிலத்தவர்கள் உலகின் மற்ற பகுதிகளோடு நன்கு துண்டிக்கப்பட்டிருந்தனர்.
6. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிமருந்து ஐரோப்பியர்களால் துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்பட்டது. ஆயிரமாண்டுகாலப் போர்ப் பட்டறிவில் மிகச்சிறந்த எஃகு வாள்கள் போர்களில் பயன்படுத்தப்பட்டன. பிற நிலத்தவர்கள் மரப்பொருள்களால் ஆன ஆயுதங்களோடு (ஈட்டி, அம்பு) நின்றனர்.
7. அச்சுத் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. அச்சு வசதியால் ஐரோப்பியர்களிடையே பல்வகை அறிவுகளும் விரைந்து பரவின. பிற கண்டங்களில் அப்போது அறிவுப் பரவலுக்கென்று (புத்தகம் போன்ற) எந்த ஒன்றும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவேயில்லை.
8. எல்லாவிதமான விலங்குகளோடும் மல்லுக்கட்டி வாழ்ந்த வாழ்க்கை ஐரோப்பியர்களுடையது. அவர்கள் விலங்குகளைப் பழக்கியதுமுதல் போர் உள்ளிட்டவற்றுக்காக அவற்றோடே தொழுவங்களில்கூட வாழ்ந்தனர். அதனால் பற்பல நோய்க்கிருமிகளுக்கும் அவர்களுடைய உடலில் எதிர்ப்பாற்றல் தோன்றியிருந்தது. பிற நிலத்தவர்கள் தூய்மையான வாழ்வைப் பேணினர். அயல்தொற்றுகளுக்கு அவர்கள் உடலில் எதிர்ப்பாற்றல் போதவில்லை.
9. ஐரோப்பாவில் உள்ளதைப்போன்ற தட்பவெப்பம் எங்கு இல்லையோ, அங்கு ஐரோப்பியர்களால் எதையும் பெரிதாகச் சாதிக்க முடியவில்லை. தென்னாப்பிரிக்காவின் தட்பவெப்பம் ஐரோப்பாவை ஒத்திருந்ததால் அதன்மீது ஆர்வம் கொண்டனர். கைப்பற்றினர். ஆப்பிரிக்காவின் பிற பகுதிகள் வெப்ப மண்டலங்கள். அங்கு ஐரோப்பியர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அங்கே இருந்து ஆள்வதை விடுத்து மனிதர்களை அடிமைகளாய்ப் பிடித்துச் சென்றனர். அவர்களுக்குப் பலனளிக்கும் கட்டுமானப் பெருஞ்செயல்களுக்கு உழைப்பைச் சுரண்டினர்.
10. வெப்ப மண்டலத்து மக்களை வாட்டிய புதுப்புதுத் தொற்று நோய்கள் பேரளவில் பரவி மக்களை முற்றாகச் சாகடித்தன. மலேரியா, அம்மை போன்ற நோய்கள் வரலாறெங்கும் போர்களைவிட அதிக மக்களைக் கொன்றன.
ஜாரெட் டைமண்ட்டின் நூலையொட்டி, அது கூறுகின்றவற்றை, நேசனல் ஜியாக்ரபிக் தொலைக்காட்சியினர் மூன்றுமணி நேர ஆவணப்படமாக ஆக்கியிருக்கின்றனர். யூடியூபில் மூன்று பாகங்களாக இருக்கின்றன. நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு சற்றே அயர்ச்சி ஊட்டுவதால் ஒரே அமர்வில் அந்தப் படத்தைப் பார்த்தேன். மனித குல ஆதிக்க வரலாற்றைப் பற்றிய புதிய திறப்பு தோன்றியது என்றே சொல்வேன். புவியியல் காரணிகள் எத்துணை பருண்மையானவை என்று புரிந்தது. நூலைப் படிக்க வாய்ப்பில்லாதவர்கள் இப்படத்தைப் பாருங்கள். நூறு படங்கள் பார்ப்பதற்கு நேர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக