சனி, ஜனவரி 30, 2016

இறங்குமுக எண்கள்

இறங்குமுக எண்கள்
*****************
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

திங்கள், ஜனவரி 25, 2016

அமிர்த கரைசல்


பச்சை பசுஞ்சாணம் -10kg
பசுவின் கோமியம் -10லிட்
நாட்டு சர்க்கரை -250g
தண்ணீர் -100lit
இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும்.இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம்.அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.பாசன நீருடன் கலந்து விட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும்.தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும்.இது மண்ணின் வளம் மற்றும் நலத்தையும் கூட்டி பயிர்கள அனைத்திற்கும் நன்மை பயக்கும்.
பிரம்மாஸ்திரா
மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம்.
அக்னி அஸ்திரம்
புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
சுக்கு அஸ்திரா
சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசு அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சானக் கொல்லியாகும். இதை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.
பீஜாமிர்தம்
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.
ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம்.
கனஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும்.
நீம் அஸ்திரா
நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
மீன் அமினோ அமிலம்
‘மீன் அமிலம்’ தயாரிப்பது மிகவும் எளிது. மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும் செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து… நன்கு பிசைந்து… ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியே ‘மீன் அமிலம்’. 10 லிட்டர் நீருக்கு 100 கிராம் (மில்லி) கலந்து பயிரில் தெளித்தால், பயிர் பச்சை கொடுத்து செழித்து வளர்கிறது

செவ்வாய், டிசம்பர் 29, 2015

தகவல்கள்.. தகவல்கள்..


தகவல் உதவி: Devaki Mohan

மும்மூர்த்திகள்

1) பிரம்மா
2) விஷ்ணு
3) ருத்ரன்

நால்வேதங்கள்

1) ரிக் வேதம்
2) யஜுர் வேதம்
3) சாம வேதம்
4) அதர்வண வேதம்

பஞ்சகன்யா

1) அகல்யா
2) தாரா
3) த்ரௌபதி
4) சீதா
5) மண்டோதரி

சப்தரிஷிகள்

1) காஸ்யபர்
2) கௌதமர்
3) பாரத்வாஜர்
4) விஸ்வாமித்திரர்
5) வசிஷ்டர்
6) ஜமதக்னி
7) அத்ரி

யோகங்கள்

1) ஸ்பர்ச யோகம்
2) பாவ யோகம்
3) ஞான யோகம்
4) மஹா யோகம்

நவவித பக்தி

ச்ரவணம் கீர்த்தனம் யஸ்ய
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்

1) ச்ரவணம் - காதால் கேட்டல்
2) கீர்த்தனம் - பக்திப் பாடல் பாடுதல்
3) ஸ்மரணம் - எப்போதும் நினைத்தல்
4) பாதஸேவனம் - திருவடித் தொண்டு செய்தல்
5) அர்ச்சனம் - மலரால் பூஜித்தல்
6) வந்தனம் - நமஸ்கரித்தல்
7) தாஸ்யம் - அடிமையாதல்
8) ஸக்யம் - தோழமை கொள்ளல்
9) ஆத்ம நிவேதனம் - தன்னையே அற்பணித்தல்

பதினாறு பேறுகள்
1) புகழ்
2) கல்வி
3) ஆற்றல்
4) வெற்றி
5) நன்மைகள்
6) பொன்
7) தானியம்
8) அழகு
9) இளமை
10) நல்வாழ்வு
11) அறிவு
12) பெருமை
13) துணிவு
14) நீண்ட வாழ்வு
15) நோயின்மை
16) நுகர்ச்சி

பதினெட்டு சித்தர்கள்
குடி கொண்டுள்ள இடம்

1) திருமூலர் - சிதம்பரம்
2) ராமதேவர் - அழகர்மலை
3) கும்பமுனி - திருவனந்தபுரம்
4) இடைக்காட்டு சித்தர் - திருவண்ணாமலை
5) தன்வந்திரி - வைத்தீஸ்வரன் கோவில்
6) வால்மீகர் - எட்டுக்குடி
7) பாம்பாட்டி சித்தர் - திருமுதுகுன்றம் என்ற
விருத்தாசலம்
8) குதம்பை சித்தர் - மயிலாடுதுரை
9) கமலமுனி - திருவாரூர்
10) போகர் - பழனி
11) மச்சமுனி - திருப்பரங்குன்றம்
12) கொங்கணவர் - திருப்பதி
13) பதஞ்சலி - ராமேஸ்வரம்
14) நந்தி - காசி
15) காங்கேயர் - கரூர்
16) கோரக்கர் - பொய்யூர்
17) சட்டைமுனி - திருவரங்கம்
18) சுந்தரானந்தர் - மதுரை

மஹரிஷிகள்

1) நாரதர்
2) பராசரர்
3) வியாசர்
4) வைசம்பாயனர்
5) விபாண்டகர்
6) ரிஷ்யசிருங்கர்
7) துருவாசர்
8) பரசுராமர்
9) கபிலர்
10) கண்வ மஹரிஷி
11) வால்மீகி
12) ஜனகர்
13) லோமசர்

ஆழ்வார்கள்

1) பொய்கையாழ்வார்
2) பூதத்தாழ்வார்
3) பேயாழ்வார்
4) பெரியாழ்வார்
5) நம்மாழ்வார்
6) ஆண்டாள்
7) திருமழிசையாழ்வார்
8) மதுரகவியாழ்வார்
9) குலசேகராழ்வார்
10) தொண்டரடிப்பொடியாழ்வார்
11) திருப்பாணாழ்வார்
12) திருமங்கையாழ்வார்

நாயன்மார்கள்

1) ஆனாய நாயனார்
2) அதிப்பத்த நாயனார்
3) ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
4) அமர்நீதி நாயனார்
5) அப்பூதியடிகள் நாயனார்
6) அறிவாட்டய நாயார்
7) சந்தேசுவர நாயனார்
8) தண்டியடிகள் நாயனார்
9) ஏனாதிநாத நாயனார்
10) ஏரிப்பத்த நாயனார்
11) ஏயக்கொங்கலிக்காம நாயனார்
12) ஞானநாத நாயனார்
13) இடங்கழி நாயனார்
14) இளையாங்குடிமாற நாயனார்
15) இசைஞானியார்
16) இயற்பகை நாயனார்
17) காரி நாயனார்
18) கலிக்கம்ப நாயனார்
19) கலிய நாயனார்
20) கணம்புள்ள நாயனார்
21) கண்ணப்ப நாயனார்
22) காரைக்காலம்மையார்
23) கழற்சிங்க நாயனார்
24) கழரீரவிவார் நாயனார்
25) கோச்செங்கட்சோழ நாயனார்
26) கூற்றுவ நாயனார்
27) கொட்புலி நாயனார்
28) குளச்சிறை நாயனார்
29) குங்கிலியக்கலய நாயனார்
30) மணக்கணைச்சார நாயனார்
31) மங்கையர்க்கரசியார்
32) மெய்ப்பொருள் நாயானார்
33) மூர்க்க நாயனார்
34) மூர்த்தி நாயனார்
35) முனையாடுவார் நாயனார்
36) முருக நாயனார்
37) நமிநந்தியடிகள்
38) நரசிங்கமுனையரய நாயனார்
39) நேச நாயனார்
40) நின்றசீர் நெடுமாற நாயனார்
41) பெருமிழலைக்குறும்ப நாயனார்
42) பூசலார் நாயனார்
43) புகழ்ச் சோழ நாயனார்
44) புகழ்த்துணை நாயனார்
45) சாக்கிய நாயனார்
46) சடைய நாயனார்
47) சத்தி நாயனார்
48) செறுத்துணை நாயனார்
49) சிறப்புலி நாயனார்
50) சிறுத்தொண்டா நாயனார்
51) சோமாச்சிமாற நாயனார்
52) சுந்தரமூர்த்தி நாயனார்
53) திருஞானசம்பந்தர்
54) திருக்குறிப்புத்தொண்ட நாயனார்
55) திருமூல நாயனார்
56)திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்)
57) திருநாவுக்கரசர்
58) திருநீலகண்ட நாயனார்
59) திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
60) திருநீலனக்க நாயனார்bi
61) உருத்திர பசுபதி நாயனார்
62) வாயிலார் நாயனார்
63) விரன்மிண்ட நாயனார்..

வெள்ளி, டிசம்பர் 11, 2015

நிலத்தின் வகைகள்


1.ஆற்றுவைப்பு – ஆற்றின் ஒதுக்கத்தால் சாகுபடி ஆகும் நிலம். 
2.அருக்கொல்லை – ஆற்றோரத்தில் உள்ள நிலம்
3.படுகை - ஆற்றோரத்து நிலம்
4.கரைவழி – ஆற்றோரமான நிலம்
5.காற்புரவு – ஆற்றுப்பாய்ச்சல் நிலம்
6.வெளிவாய்ப்படுகை –- ஆறு, குளங்களை அடுத்து உள்ள புறம்போக்கு நிலம்.
7.இறைப்புப் பட்டரை – கிணற்றுப் பாய்ச்சல் உள்ள நிலம்.
8.ஏற்றப்பட்டரை – ஏற்றமிட்டு இறைக்கும் கிணற்றைச் சூழ்ந்த நிலம்.
9 தூர்வை – கிணற்றைச் சேர்ந்த நிலம்.
10 .ஆயக்கட்டு - ஒரு நீர் நிலையை ஆதாரமாக கொண்ட நிலம்.
11.நன்செய் - நீர்வளம் நிறைந்த நிலம்.
12.புன்செய் – வானம் பார்த்த பூமி 
13.அளக்கர்திணை – கடலாற் சூழப்பட்ட நிலம்
14.வானம் பார்த்த நிலம் – மழை பெய்தால் மட்டுமே விவசாயம் நடைபெறும் நிலம்
15.ஏரங்காடி – பருத்தி விளையும் புஞ்செய் நிலம்
16.நாற்றங்கால் - விதைகளை விதைத்து நாற்றுப்பயிரிடும் இடம்.
17.சாட்டி - அறுவடை ஆனபின் உழாது கிடக்கும் நிலம்
18.குளக்கீர் - குளத்தில் மதகை அடுத்துள்ள வயல், குளம்பார்த்தநிலம்.
19.நகரி - அரசு புறம் போக்கு நிலம் 
20.பெரும்பேறு - அரசுக்கு உரிமையான நிலம்
21.சூன் - புறம்போக்கு நிலம்
22.குடிவார நிலம் - குடிகள் பயிரிட உரிமையுள்ள நிலம்
23.பள்ளத்தாக்கு - இருண்டு மேடுகளுக்கு இடையே உள்ள நிலம்
24.பள்ளம் - பள்ளத்தில் உள்ள நிலம், 
25.தில்லியம் - புதியதாக திருத்தப்பட்ட விளை நிலம்
26.உறாவரை - பயிர் உள்ளே வராத எல்லை உள்ள நிலம்
27.எடார் - வெளிநிலம்
28.செய்யுள் - விளைநிலம்
29.தொய்யில் - செறிப்பு .உழுநிலம்
30.பண்ணை - வயல்
31.செந்திரம் - செய்தல் நிலம்
32.பாசல் - பசிய விளைநிலம்
33.நன்னிலம், நன்செய் - நெல் விளையும் புலம்
34.படப்பு - கொல்லை
35.துடவை - உழவுக்கொல்லை
36.விதைப்புனம் - புதுக்கொல்லை
37.முதை - பழங்கொல்லை
38.பின்னை - வீட்டுக்கொல்லை
39.திருத்து,கருஞ்செய் - நன்செய்நிலம்
40.தாக்கு - நெல்வயல்
41.வற்புலம்,தகர்,தராய் - மேட்டுநிலம்
42.காங்கவீனம்,தினைப்புனம் - திணைவிளையும்நிலம்
43.சேற்றுப்புழி - உழப்பட்டநிலம்
44.விரைக்கால் - விதைக்குரியநிலம்
45.தடி - சிறுவயல்
46.காணியாட்சி - உரிமைநிலம்
47.காடாரம்பம் - நீர்பாசனமில்லாதநிலம்
48.கணியாட்சி - உரிமைநிலம்
49.வட்டகை - அடைப்புநிலம்
இதுபோன்று 120 வகையான நிலங்கள் உள்ளன

தகவல் : http://suyathozhil.mudhalseithi.tv/videos.php?nid=26

செவ்வாய், நவம்பர் 24, 2015

ஏமாற்றம்

படித்ததில் உறைத்தது.
ஒரு பணக்காரன் ஒரு கிராமத்திற்கு வந்து சொன்னான்... வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏராளம் பாம்புகள் தேவைபடுகிறது. நீங்கள் ஒரு பாம்பை பிடித்து தந்தால், 10 ரூபாய் தருகிறேன் என்றான். உடனே கிராம மக்கள் ஊரில் உள்ள பாம்புக்களை எல்லாம் பிடித்து கொடுத்து 10 ரூபாய் வீதம் வாங்கி கொண்டார்கள். ஊரில் உள்ள எல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.
அதனால் மக்களுக்கு அதில் இருந்த ஆர்வம் குறைந்து போய்விட்டது. உடனே அந்த பணக்காரர், இனி
பாம்பை பிடித்து கொடுப்பவர்களுக்கு 25 ரூபாய் தருவதாக சொன்னார். அவர்கள் மீண்டும் உற்சாகமாகி தேடி தேடிபாம்பை பிடித்து கொடுத்தார்கள் .ஊரில் ஒன்று கூட மிச்சம்வைக்காமல்
எல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை மிக மிக மிக குறைய ஆரம்பித்து பாம்பை பார்ப்பதே அரிதாகி விட்டதால் அதில் இருந்த ஆர்வம் குறைந்துபோய்விட்டது.
அந்த பணக்காரர் விடவில்லை. இப்போது 50
ரூபாய் தருவதாக அறிவித்தார். உடனே ஊரில் உள்ள மக்கள் அருகில் இருந்த காடு மலை சென்று ஒன்று விடாமல் பிடித்துகொடுத்தார்கள். இப்போது பாம்பே இல்லாத நிலையாகிவிட்டது.
அவர் இப்போதும் விடவில்லை.எனக்கு இன்னும் அதிகபாம்புகள் தேவை. மேலும்பாம்பு கிடைப்பது அரிதாகிவிட்டதால் 200 ரூபாய் தருவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் தான் அவசரமாக இன்னொரு தொழில் விஷயமாகமற்றொரு ஊர் செல்ல வேண்டுமென்பதால் ஒரு வாரத்தில்
வந்து வாங்கி கொள்கிறேன். அதனால் உங்களால் முடிந்த அளவு பிடித்து கொண்டுவாருங்கள் என்று சொல்லி, நான் வரும்வரைக்கும் என் உதவியாளர் இங்கு இருப்பார் என்று சொல்லி சென்று விட்டார்.
அடுத்த நாள் அந்த உதவியாளர் ஊர் மக்களை கூப்பிட்டு..."மக்களே இங்கே பாருங்கள் நீங்கள் பிடித்து தந்த அனைத்து பாம்புகளும் இந்த கூண்டில் உள்ளது. நிச்சயமாக சொல்லுகிறேன் இந்த ஊரிலும் அதற்கு அருகில் எங்கேயும் பாம்புகளே இல்லை. அதனால் நான் ஒரு ஐடியா வைத்து இருக்கிறேன்.
இந்த பாம்புக்களை எல்லாம் நான் உங்களுக்கு 75 ரூபாய்க்கு விற்கிறேன். அதன்பின் முதலாளி வருவதற்கு முதல் நாள் நான் அவசர அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கிறது என்று அவருக்கு போன் மூலம் சொல்லி சென்று விடுகிறேன். அவர் வந்ததும், இதே பாம்பை நீங்கள்
அவரிடம் 200 ரூபாய்க்கு விற்றுவிடுங்கள்" என்று சொன்னார்.
உடனே மக்கள் தங்கள் சேமிப்பில் இருந்த பணத்தையும் இருந்த நகைகளையும் விற்று அந்தபணத்தில் பாம்பை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிகுவித்தார்கள். எல்லாப் பாம்பையும் விற்ற அந்த உதவியாளர் முதலாளி நாளைவருகிறார் அதனால் நான் இன்று போய் விடுகிறேன் என்று சொல்லி கிளம்பி சென்று விட்டார். அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை அந்த ஊர் மக்கள் அந்த முதலாளியையும் பார்க்கவில்லை.. அந்த உதவியாளனையும் பார்க்கவில்லை....!
இப்போது அவர்களிடம் இருப்பது அந்த பாம்புகள் மட்டும்தான்....!

திங்கள், நவம்பர் 09, 2015

கொல்லிமலையின் குறிப்புகள்

தமிழ்நாட்டில் கொல்லிமலை இருக்கும் இடம் கொல்லிமலை. இயற்கை வளம் மிக்க மலை. இது இந்தியாவின் தெற்கு பகுதியில், தமிழ்நாட்டின் நடுப்பகுதியில், நாமக்கல் திருச்சி மாவட்டத்தின் எல்லையாக அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும்.
கொல்லி மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் கடைசி மலையாக அமைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலை பெயருக்கேற்றார்ப்போல் தொடர்ச்சியாக இல்லாமல் அங்கங்கே விட்டு இருக்கும். மேற்குத் தொடர்ச்சி மலை அவ்வாறின்றி தொடர்ந்தும் அடர்ந்தும் காணப்படும். பற்பல நதிகள் இந்த கிழக்குத் தொடர்ச்சி மலையை ஊடறுத்து ஓடுவதால் தொடர்ச்சியாக இருக்க முடிவதில்லை போலும். கொல்லும் கொடிய நோய்கள் நிறைந்தும், அத்தகைய கொடிய நோய்களையும் கொல்லும் அற்புத மூலிகைகள் கொண்டும் அழகுற விளங்குகிறது கொல்லி மலை.
நாமக்கல்லில் இருந்து 55 கி.மீ தொலைவிலும் கடல் மட்டத்தில் இருந்து 1000 முதல் 1600 மீட்டர் உயரமும் உள்ள இம்மலை வடக்கு தெற்காக 28 கி.மீ பரப்பளவும், கிழக்கு மேற்காக 19 கி.மீ பரப்பளவும், மொத்தத்தில் 441.4 சதுர கி.மீ பரப்பளவும் கொண்டுள்ளது. கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து அரசுப் பேருந்து மற்றும் தனியார் பேருந்து வசதி உள்ளது. நாமக்கல்லிலிருந்து கொல்லி மலைக்கு 43 இருக்கைகள் கொண்ட சிறிய பேருந்து (Mini Bus) செல்கிறது.
மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. செங்குத்தான இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் (Hair Pin Bend) உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர். கார், வேன்களில் சுற்றுலா செல்வோரும் மலைப்பாதையில் கவனமாக செல்வது நன்று. இம்மலைப் பாதை, மழைக்காலத்திற்கு ஏற்றதன்று. 2 அல்லது 3 கொண்டை ஊசி வளைவுகளுடன் அபாயமற்ற மாற்று மலைப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கொல்லிமலைக்குச் செல்ல முக்கியமாக இரண்டு பாதைகள் உள்ளன. ஓன்று நாமக்கல் சேந்தமங்கலம் வழியாக கோம்பை காடு என்னும் ஊர் வழியாக செல்ல வேண்டும். கோம்பையிலிருந்து 12 மைல் தூரம் சென்று அறப்பளீஸ்வர சுவாமி கோயிலை அடையலாம்.
மற்றொன்று கொப்பம்பட்டி வைரிசெட்டிப்பாளையம் வழியாக புளியஞ்சோலை சென்று அங்கிருந்து 5 மைல் தூரம் சென்றபின் மலையேறும் தரைமட்டத்தில் இருந்து 2 மைல் சென்று அறப்பளீஸ்வர சுவாமி கோயிலை அடையலாம்.
இம்மலை சுமார் 40 சதுர மைல் (280 சதுர கிமீ) நிலப்பரப்பும், 5000 க்கும் மேல் உள்ள ஜனத்தொகையையும், 85 கிராமங்களையும் கொண்டது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது.
இம்மலைமீது பல ஊர்கள் உள்ளன. இங்குள்ள பலவூர்களிலும் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த மலையிலே வாழும் பூர்வகுடிகள் மலைவாழ் மக்கள் என்றும், மலைக்கௌண்டர்கள் என்றும் அழைக்கப் படுகின்றனர்.
இந்தியாவிலேயே கரடிகள் இந்த பகுதியில் மிக அதிகம். அந்தக் கொல்லி மலையில் மரங்களில் பாம்புகள் தலை கீழாகத் தொங்கிய படி இருக்கும் காட்சியை காணலாம், பலாப்பழம், அன்னாசி, பேரிக்காய், கொய்யா, மாம்பழம், காப்பி, அதிகம் விளைகிறது, மான்களும், மயில்களும் அங்கே சுற்றித் திரியும்.
கொல்லிமலையில் இருந்து சுவேதா நதியும், கோம்பை ஆறு, அய்யாறு, கூட்டாறு, கருவோட்டாறு, கல்லக்குழியில் பஞ்ச நதி போண்ற ஆறுகள் உற்பத்தியாகி நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு ஏரிகளை நிரப்பி காவிரி ஆற்றில் கலக்கின்றது. கொல்லிமலையில் நீர் ஊற்று நிறைந்த இடங்கள் அதிகம் காணப்படுகின்றன. இங்குள்ள குன்றுகளில் தேன் கூடுகளைக் காணலாம்.
இம்மலைக் காடுகளில் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது. கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு. நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு கொல்லிவாய்ப் பறவைகள் அதிகம் வசித்தால் இது கொல்லிமலை என்று பெயர் பெற்றது என்றும் கூறுவர். நான்கு புறமும் சதுர வடிவில் மலைகளால் சூழப்பட்ட பகுதியாக உள்ளதால் இது சதுரகிரி எனவும் அழைக்கப்படுகிறது.
வரலாற்று சிறப்புமிக்க அறப்பளீஸ்வரர் கோயிலின் அருகில் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி உள்ளது. நீர் வீழ்ச்சிக்குச் செல்ல 720 படிகட்டுகள் உள்ளன. இதை தமிழக அரசின் சுற்றுலா துறை படிக்கட்டுகள் அமைத்துள்ளது. 160 அடி உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சி விழுகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் குளித்தால் பல்வேறு நோய்கள் தீருவதுடன் உடல் ஆரோக்கியம் அடைகிறது. நீர்வீழ்ச்சியில் இருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதிறை அடைகிறது.
கோயிலுக்கு முன் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நீரோடை உள்ளது. அந்த காலத்தில் நீரோடையில் ஏராளமான மீன்கள் துள்ளி குதித்து விளையாடியதாம். கோயிலுக்கு வரும் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி மீனை பிடித்து அதன் மூக்கில் தங்க கம்பியை பொருத்துவார்களாம். அப்படி மீனுக்கு முள் குத்தி விடுபவர்களுக்கு அந்த ஆண்டே குழந்தை பிறக்கும் என்று கூறப்படுகிறது.
மலைவாசிகள் அறப்பளீஸ்வரரை குல தெய்வமாக வணங்குகிறார்கள். மைசூர் சுவாமிகள் என்று அழைக்கப்படும் நாதநந்த யோகியின் சமாதி கோயிலுக்கு மேற்கில் இருக்கிறது. கோயிலுக்கு வடக்கில் பஞ்ச நதி ஆறு ஓடுகிறது. காடுகளும் சோலைகளும் நிறைந்த அப்பகுதியில் இயற்கையின் காட்சி கண் கொள்ளாதது. கோயிலுக்கு நேர் கிழக்கில் ½ மைல் கீழே பயங்கரமான பாதை வழியில் இறங்கிப் போனால் 160 அடி உயரத்தில் இருந்து ஆகாய கங்கை அருவி விழுவதைப் பார்க்கலாம்.
அந்த அருவி நீர் பாயும் ஓடை வழியாகச் சென்றால் ஒரு சிறு செங்குத்தான குன்றும் அதனுள் குகையையும் காணலாம். இது கோரக்கர் குகை எனப்படுகிறது. குகைப் பக்கத்தில் தென்புறம் ஒரு அகழி இருக்கிறது. இது கோரக்கர் குண்டம் என அழைக்கப்படுகிறது. இங்கு கோரக்கர் என்னும் சித்தர் தன் மாணவர்களுடன் கூடி தவம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த குகையைச் சுற்றிப் பல அரிய மூலிகைகளைக் காணலாம்.
அறப்பளீஸ்வரர் கோயிலில் இருந்து வட பக்கம் 3 மைல் தூரத்தில் சோரம் அடையான் கோயில் உள்ளது. இது மலைவாசிகளால் வணங்கப்பட்ட முந்தைய தெய்வம் என கருதப்படுகிறது. இந்த கோயிலில் இருந்து மேற்குப்புறம் 1 மைல் தூரத்தில்தான் கொல்லிப்பாவை என்னும் சிலை உள்ளது.
இங்கிருந்து கிழக்கு நோக்கி 2 மைல் சென்றால் அங்கு ஒரு குன்றின் மீது பெரியண்ண சுவாமி கோயில் இருக்கிறது. தரை மட்டத்தில் இருந்து 300 அடி உயரத்தில் பழைய காலத்து குயவன் மண் ஓடுகளால் கோயிலும், மண்ணினால் செய்யப்பட்ட குதிரை சிலை வாகனத்தில் அமர்ந்து கையில் திரிசூலம் ஏந்தி வேட்டைக்குச் செல்லும் பாணியில் பெரியண்ண சுவாமி சிலையும் காட்சியளிக்கிறது.
இங்கு பல சித்தர்கள் வாழ்ந்தார்கள். இன்றும் இங்கு சித்தர்களைக் காணலாம். அவ்வையார் முதல் 18 சித்தர்களும் இம்மலையில் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இதற்கு ஆதாரமாக குகைகளும் காணப்படுகிறது. சித்தர்கள் இங்குள்ள மூலிகைகளின் பயன்களை அறிந்து அவற்றை மக்கள் பயன்படுத்தும் விதத்தில் ஓலைச் சுவடியில் எழுதி வைத்துள்ளனர். நவபாஷாண சிலைகள், மூப்பு பலவித விலை மதிப்புள்ள கற்கள் இம்மலையில் இன்றும் காணப்படுகிறது. இம்மலையில் உள்ள மூலிகைகள் தவிர பதிணென்கீழ் சித்தர்களால் தயார் செய்யப்பட்ட பல அரிய மருந்துகள், தைலம், ரசமணி, மூப்பு, சுண்ணம் இவைகள் கல்லறைகளில் புதை பொருளாக வைக்கப்பட்டிருப்பதாக காலங்கி நாதர் மலைவளம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கொல்லிமலை ஒரு காலத்தில் மூலிகைகளின் செர்க பூமியாகத் திகழ்ந்தது. மருத்துவ குணம் வாய்ந்த அரிய வகை மூலிகைகள் அடர்ந்த காட்டுப் பகுதியிலும் நீர் கசிந்து கொண்டு இருக்கும் இடங்களிலும் காணப்படுகிறது. இம்மூலிகைகள் தானே வளர்ந்து பின்னர் அழிந்து வளரும் தன்மை கொண்டது. இந்த மூலிகைகளை மாந்திரீக தன்மை வாய்ந்ததாக கருதி மலைவாழ் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளான வேலால் தாக்கப்பட்ட புண்ணை ஆற்றும் சாவல்யகரணி, துண்டிக்கப்பட்ட பாகங்களை ஒன்று சேர்க்கும் சந்தாண கரணி, ஜோதி விருட்சகம், சாயா விருட்சகம், அழுகுண்ணி, தொழுகண்ணி போண்ற மூலிகைகள் இங்கு மட்டுமே காணப்படும் அரிய மூலிகைகளாகும். இம்மலையில் மூலிகையைத் தேடி வரும் யாவரும் கொல்லிப்பாவையை வணங்கியே செல்ல வேண்டும் என சொல்லப்படுகிறது.
இம்மூலிகைகளுக்கும் அரிய மருந்துகளுக்கும் காவலாக கொல்லிப்பாவை பெரியண்ண சுவாமி என்னும் தெய்வங்களை அமைத்து வைத்திருப்பதாக சித்தர் நூலால் அறிகிறோம்.
வரலாற்றுக் குறிப்புகள் : பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. கொல்லிப்பாவையின் வரலாறு சங்க நூல்களில் வேறு விதமாகக் காணப்படுகிறது.
இம்மலையும் இதைச் சார்ந்த கிராமத்தையும் சுமார் கிபி 200-ல், ஓரி என்ற அரசன் ஆட்சி புரிந்ததாக வரலாறுகளில் காணப்படுகிறது. இவனது மகள் தான் கொல்லிப்பாவை. இவள் அழகில் சிறந்தவள். புறனானூற்றில் இவளைப் பற்றி பல பாடல்களில் சிறப்பாக கூறப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு கொண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி கொல்லிமலையை முன்பு ஆட்சி செய்தான். சேரனின் ஆட்சி பிடியில் இருந்து விடுபட்டு கொல்லிமலையை வல்வில் ஓரியும், முசிறியை ஆண்ட கழுவுள், தகடூரை ஆண்ட அதியமான் ஆகிய மூன்று பேரும் தனி ஆட்சி செய்தனர்.
ஓரி என்பதற்கு தேனின் முதிர்ந்த நிறம் என்று பெயர். இந்த நிறமுடைய குதிரையை இவன் பெற்று இருந்ததால் இவனுக்கு ஓரி என்ற சிறப்புப் பெயர் கிடைத்தது. இவனுடைய இயற்பெயர் ஆதன். வில் எய்வதில் சிறந்தவன் ஆக விளங்கியதால் வல்வில் ஓரி என்று அழைக்கப்பட்டான். ஒரே அம்பில் யானை, புலியின் வாய், மானின் உடல், காட்டுப் பன்றி, உடும்பின் தலை ஆகியவற்றை துளையிட்டு, 5 விலங்கினங்களைக் கொன்றான் என்ற சிறப்பே வல்வில் ஓரி என்ற பெயர் நிலைக்க காரணமாயிற்று. வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து பல பாடல்கள் உள்ளன.
இவன் நாமக்கல் ராசமாபுரமாகிய ராசிபுரம், கொல்லிமலை ஆகிய பகுதிகளை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். ராசிபுரம் சிவன் கோயிலும், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலும் வல்வில் ஓரி ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டவையாகும். இங்கு வல்வில் ஓரிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இச்சிலைக்கு விழா எடுக்கப்படுகிறது. மறவர் குடியைச் சேர்ந்தவன் ஓரி என வரலாற்றுச் சான்றுகள் கூறுகிறது.
பெருஞ்சேரல் இரும்பொறை, மலையான் திருமுடிக்காரி படையுடன் வந்து வல்வில் ஓரியுடன் போரிட்டான். நீர் கூர் மீமிசை என்ற இடத்தில் நடந்த போரில் படை வலிமை குறைந்த வல்வில் ஓரி தோற்றதுடன் இறந்தும் போனான். பெருஞ்சேரல் ஓரியை வென்றதன் அடையாளமாக கொல்லிப் பொறையன் என்ற காசை வெளியிட்டான். வல்வில் ஓரியை போரில் தோற்கடித்து இறக்கச் செய்தபின் பெருஞ்சேரல் கொல்லிமலையின் உள்ளே தன் படையுடன் நுழைந்தான். ஆனால் கொல்லிமலை மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு அவனை ஊருக்குள் விடாமல் தடுத்தனர். இதனால் தன் படைத்தலைவன் பிட்டன் கொற்றனிடம் கொல்லிமலையை ஆட்சி செய்ய ஒப்படைத்ததாக அகநானூற்றில் கூறப்பட்டுள்ளது.
வல்வில் ஓரியின் சாவுக்கு, அவன் உறவினனாகிய அதியமான் நெடுமானஞ்சி, சோழன் கிள்ளி வளவனுடைய உதவியைக் கொண்டு திருக்கோவலூர் மீது படையெடுத்துச் சென்று அந்த ஊரையும் அழித்தான்; மலையமானுடைய முள்ளூர் மலைக் கோட்டையையும் தரைமட்டமாக்கினான், என்று பொன்னியின் செல்வனில் கூறப்பட்டுள்ளது.
கொல்லிமலையில் 19 கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 12 கல்வெட்டுக்கள் சோழ மன்னர்களின் கால கட்டத்தைச் சார்ந்தவையாகும்.
இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.
காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் இம்மலையில் பல குகைகளில் தங்கித் தவம் செய்துள்ளனர்.
சுற்றுலாத் தலங்கள்
1. ஆகாச கங்கை நீர் வீழ்ச்சி : அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு எதிரில் செல்லும் வழியாக 720 படிகள் இறங்கிச் சென்றால், இந்த நீர் வீழ்ச்சியில் நீராடலாம். 160 அடி உயரத்திலிருந்து நீர் விழுகிறது. படிகள் இறங்கி, ஏறுவது கடினமாகவுள்ளது. மழைக்காலத்தில் அருவியில் நீர்ப் பெருக்கு அதிகமிருக்கும். ஆதலால் நீராட முடியாது, கோடை காலத்தில் மட்டுமே நீராடலாம். 160 அடி உயரமுடைய இந்நீர் வீழ்ச்சியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது.
2. கொல்லிப் பாவைக் கோவில் : கொல்லி மலையில் கொல்லிப் பாவைக்கு ஒரு கோவில் உள்ளது. அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு மேற்கில் "கொல்லிப்பாவை" என்னும் தெய்விகச் சக்தி வாய்ந்த பதுமை ஒன்று இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சிந்தாமணி, குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானூறு ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புக்களை அறிகிறோம்.
கொல்லிப்பாவை என்பது கொல்லிமலை மேல் சித்தர்களால் செய்து வைக்கப்பட்ட பதுமை. கொல்லிமலை தவம் செய்வதற்கும் தனித்து வாழ்வதற்கும் தகுதியான இடம். தேன், பலா, கொய்யா முதலிய பழவகைகள் நிறைந்த இடம் எனவே சித்தர்கள், முனிவர்கள் அங்கு தங்கினர். இதைத் தெரிந்து கொண்ட அசுரர்கள் அங்கு வந்து கூடினர். இவ்வாறு அசுரர்கள் வந்து கூடியதால் முனிவர்களின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
அப்பொழுது தேவரும், முனிவரும் அப்பகைவரை அடக்கவோ, எதிர்க்கவோ முடியாததால் அசுரர்கள் வரும் வழியில் அவர்கள் கண்டு மயங்கும் வண்ணம் அழகமைந்த பெண் வடிவம் செய்து வைக்க நிச்சயத்து விஸ்வகர்மாவை அழைத்து தமக்கு உற்ற துன்பத்ததைக் கூற அவரும் அம்மலைமேல் அசுரர் வரும் வழியில் கல்லால் பாவை ஒன்றை செய்து, அதற்கு பல சக்திகளை ஊட்டி, அசுரர் வாடை பட்டவுடன் நகைக்கும் திறமும், காண்போரின் விழியும், உள்ளமும் கவர்ந்து அவருக்கு பெரும் காமவேட்கை வருவித்து, இறுதியில் கொல்லத்தக்க மோகினி வடிவம் அமைத்து அங்கே பிரதிஷ்டை செய்தார்.
இப்பாவையின் உடல் உறுப்புகள் அசையும் தன்மையானவை. இப்பாவையை நோக்கினோர் அச்சக்தி இயங்குவதையும், நகைப்பதையும் கண்டு பெண் என மயங்கி காமநோய் கொண்டு அருகே செல்லும் போது அது தன் மாய சக்தியால் அவரைக் கொன்றுவிடும். இப்பாவை காற்று, இடி, மழை, பூகம்பம் இவற்றால் அழியாது என நற்றினை என்னும் நூலில் பரணர் என்னும் புலவரால் பாடப்பெற்றுள்ளது.
இக்கொல்லிப் பாவையால் இம்மலை காக்கப்படுவதால் இது கொல்லிமலை எனப் பெயர் பெற்றதென்பர். கொல்லிப் பாவையை இம்மலை வாழ் மக்கள் "எட்டுக்கை அம்மன்" என்று கூறுகின்றனர்.
3. அறப்பளீஸ்வரர் கோவில் : சதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஊர் பெரிய கோயிலூர் என்றும்; கோயிற் பகுதி அறப்பளீசுரர் கோயில் என்றும் வழங்குகிறது. அறை ஸ்ரீ சிறிய மலை. பள்ளி ஸ்ரீ கோயில். மலைமேல் உள்ள கோயில் ஸ்ரீ அறைப்பள்ளி. இறைவன் அறைப்பள்ளி ஈஸ்வரர். இப்பெயர் மருவி அறப்பளீஸ்வரர் என்றாயிற்று. பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார். இங்குள்ள ஈசன் 'அறப்பளி மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாளும் அழைக்கப்படுகிறார்.
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் அய்யாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் 'மீன் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. பக்தர்கள் கொல்லி மலை நீர்விழுச்சியில் நீராடி அரபளீஸ்வரரை தரிசனம் செய்வார்கள்.
இக்கோயிலுக்குப் பக்கத்தில் "மீன்பள்ளி" ஆறு ஓடுகிறது; இம்மீன்பள்ளியாற்றில், இறைவன் மீன்களின் வடிவில் விளங்குவதாக ஐதீகம். எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து, அவற்றுக்கு உணவு தரும் பழக்கம் பண்டை நாளில் இருந்து வந்துள்ளது. இதன்பின்னரே அறைப்பள்ளிநாதருக்கு பூசை நிகழுகிறது.
கொல்லி மலையில் (சதுரகிரியில்) எழுந்தருளியுள்ள அறப்பளீசுவரப் பெருமான் மீது, அம்பலவாண கவிராயர் என்பவர் "அறப்பளீசுர சதகம்" என்னும் அருமையான நூலைப் பாடியுள்ளார். அதன் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே' என்றமைத்துப் பாடியுள்ளமை சிறப்பிலும் சிறப்பு.
இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
உறையூரில் வாழ்ந்த பெருஞ்செல்வர் திரு. அருணாசல முதலியார் என்பவர், பல லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து இக்கோயிலில் கும்பாபிசேகம் செய்வித்துள்ளார்.
4. முருகன் கோவில் : அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேடர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சிவன், பார்வதி, விஸ்ணு, இடும்பன் மற்றும் விநாயகருக்கும் இங்கு ஆலயங்கள் உள்ளன.
5. படகு சவாரி : தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும்
6. வியூ பாயிண்ட் : இந்த இடம் ஊட்டி தொட்டபெட்டா அளவிற்கு இல்லையெனினும் பார்க்க வேண்டிய இடமாகும்.
7. வல்வில் ஓரி பண்டிகை : செம்மேட்டில் (செம்மேடு என்பது இவ்வனப்பகுதியில் மையமான ஊராகும்;) காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை, நூலகம், தொலைபேசி நிலையம் முதலியன உள்ளது. 'வல்வில் ஓரி' மன்னனின் சிலை குதிரை மீதுள்ள 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரியின் நினைவாக 'வல்வில் ஓரி விழா' நடத்தப்படுகிறது. மலைவாழ் மக்கள் ஆடிப் பெருக்கு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
கொல்லி மலையில் இந்தியாவிலேயே பெரிய மூலிகைப் பண்ணை அரசாங்கத்தால் (வனத்துறையினர்) நிர்வகிக்கப்படுகிறது. தமிழ்நாடு தோட்டக் கலைத் துறையினரின் பண்ணையும் இம்மலைப் பகுதியில் உள்ளன.
8. வார சந்தை : கொல்லிமலை என்றாலே சுற்றுலா பயணிகளுக்கு நினைவுக்கு வருவது அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி. அதற்கு அடுத்தாற்போல் நினைவுக்கு வருவது அங்கு விளையும் பலா மற்றும் அன்னாசி பழங்கள் ஆகும்.
மலையில் உள்ள மண்வளம் மற்றும் நீர் வளத்தால் இங்கு விளையும் அன்னாசி பழம் மிகுந்த சுவையுடையதாக உள்ளது. அந்த பழத்துக்கு ஏற்றார் போல் சந்தையில் விலை கிடைத்து வருகிறது. இதனால் கொல்லிமலையில் உள்ள சோளக்காடு வாரச்சந்தையில் அன்னாசிபழம் அதிகமாக கிடைக்கிறது.
கொல்லிமலையில் அரியூர் நாடு மற்றும் குண்டூர் நாடு ஆகிய பகுதிகளில் தான் அன்னாசி அதிகம் விளைந்து வருகிறது. இங்குள்ள குழிவளவு, தேவகாய், மூடுபாலி, தேனூல், துவரபள்ளம், வெள்ளகுழி, நத்துகுழி போன்ற கிராமங்களில் விளையும் அன்னாசி பழங்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த மலையில் அதிக முட்கள்களுடன் காணப்படும் நாட்டு ரக அன்னாசியும், முட்கள் இல்லாமல் காணப்படும் கியூ ரக அன்னாசிகளும் விளைந்து வருகிறது. இதில் கியூ ரக அன்னாசி பழங்கள் ஜுஸ் தயார் செய்வதற்காக தொழிற்சாலைகளுக்கும், மற்ற பழங்கள் வெளி மாவட்ட விற்பனைக்கும் அனுப்பப்படுகிறது.
கடந்த 2008ம் ஆண்டு ஒரு செமையின் (ஒரு சாக்கில் 25 பழங்கள்) விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனையானது. 2009 ம் ஆண்டு 150 ரூபாய் வரைதான் விற்பனையானது. இந்த நிலையில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து விற்பனைக்கு கொண்டு செல்ல வியாபாரிகள் சந்தையில் குவிந்து விவசாயிகளிடம் பேரம் பேசி அன்னாசி பழங்களை வாங்கி செல்கின்றனர்.
இதில் சிறு ரக அன்னாசி, நாட்டு ரகம், கியூ அன்னாசி என்று ரகங்கள் பிரித்து விற்பனை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. சோளக்காடு வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் நடைபெற்று வருகிறது.
9. தாவரவியல் பூங்கா : தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானலில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதை போல கொல்லிமலை வாசலூர்பட்டியில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த தாவரவியல் பூங்காவில் 87 வகையான மூலிகைகள் இடம் பெற்றுள்ளது. பூங்காவின் நடுவில் குறுக்கும், நெடுக்குமாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சிறுவர்கள் விளையாட்டு தளம், மூலிகைப் பண்ணை, ரோஜா தோட்டம், கண்ணாடி இல்லம் மற்றும் இயற்கை புல் தரைகள், மூங்கில் காடுகளின் தோற்றம் போன்றவை கண்ணை கவரும் வகையில் உள்ளது.
மேலும் 3 விதமாக பசுமை குடில்கள் சுற்றுலா பயணிகள் தங்கி ஓய்வெடுக்க ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. புலி குகை இல்லம், மூங்கில் படகு போன்ற அமைப்பில் ஒரு குடில், ஜப்பானிய முறையில் ஒரு இல்லம் தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.
கொல்லிமலையில் காட்சி கோபுரம் (வியு பாயிண்ட்) அமைக்கப்பட்டுள்ளதை போல வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் பூங்காவை இணைக்கும் வகையில் மிக உயரமான அளவில் ரூ. 6 லட்சம் மதிப்பில் காட்சி கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.
காட்சி கோபுரம் அருகில் இயற்கை காட்சியை ரசிக்கும் வகையில் 2 மீட்டர் அகலத்தில் குறுக்கே நடைபாதையில் சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
இந்த தாவரவியல் பூங்கா காட்சி கோபுரம் அருகே உள்ள இயற்கை காட்டில் மான்கள் சுற்றிவரும் வகையில் அமைக்கப்பட இருக்கிறது.
தினத்தந்தி செய்திகள்
கொல்லிமலையில் முதுமக்கள் வாழ்ந்த தாழி கண்டுபிடிப்பு
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள வாசலூர்பட்டியில் சின்ன சோளக்கண்ணி என்னும் கிராமத்திற்கு செல்லும் வழியில் முதுமக்கள் வாழ்ந்த தாழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலம் வாழ்ந்து வயது ஆனதும் இந்த தாழியில் அவர்களை வைத்து தண்ணீர் மற்றும் உணவு வழங்கப்பட்டதாகவும், அதை அவர்கள் சாப்பிட்டு அதிலேயே அவர்களது உயிர் பிரியும் வகையிலும் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
இந்த தாழிகள் சுமார் 2 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வைக்கப்பட்டுள்ள தாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் சுரங்க பாதை ஒன்றும் காணப்படுகிறது. அது தரையில் சுமார் 5 அடி ஆழத்திலும் 5 அடி அகலத்திலும் இருப்பதாக தெரிகிறது.
இதே போல் கொல்லிமலை பைல் நாட்டில் கீழ் கழுவூர் என்னும் இடத்தில் தாழி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவைகளை மாவட்ட நிர்வாகம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மூங்கில் நெல் அறுவடை : கொல்லிமலை அடிவாரத்தில் 40 வருடத்திற்கு பிறகு மூங்கில் தோப்பில் இருந்து இயற்கையாக கிடைக்கும் நெல் சீசன் தற்போது தொடங்கி உள்ளது.
கொல்லிமலை அடிவாரத்தில் காரவள்ளியில் வனத்துறையின் சோதனை சாவடி உள்ளது. அந்த பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் மூங்கில் தோப்புகள் காணப்படுகிறது.
அந்த தோப்புகளில் அதிக அளவு உயரம் கொண்ட மூங்கில் மரங்கள் காணப்படுகிறது. தற்போது அந்த மரங்களில் பால் பிடித்து, பூ வைத்து உள்ள நிலையில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்து அதன் எடை தாங்காமல் வளைந்து காணப்படுகிறது.
40 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அந்த பூ சீசன் தோன்று வதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பூவில் இருந்து இயற்கையான நெல் கிடைக்கிறது. அதாவது உரம் போடாமலேயே இயற்கையில் விளையும் தன்மை கொண்ட தாகும்.
அவ்வாறு விளையும் நெல் தற்போது அந்த பகுதியில் கொட்டி வருகிறது. இதனை அப்பகுதி விவசாயிகள் சமைத்து சாப்பிடவும் செய்கின்றனர். இது தவிர வனபகுதிக்குள் திரிந்து கொண்டு இருக்கும் காட்டுக் கோழி, குரங்கு, பன்றி போன்ற வைகள் மூங்கில் மரங்களின் கீழே கிடக்கும் நெல்களை சாப்பிடுகிறது. இன்னும் 1 மாதம் வரையில் அந்த இயற்கையான நெல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு அந்த மூங்கில்களின் ஆயுட் காலம் முடிவடைந்து விடுகிறது.
அந்த மரங்களை இதர உபயோகங்களுக்காக வெட்டி விடுகின்றனர். தற்போது அந்த மூங்கில் மரங்களை கொல்லிமலைக்கு செல்லும் சாலையின் இருபுறங் களிலும் காணும் போது அவைகள் நம்மை வரவேற்பதாக காணப்படுகிறது. இவை பெரு வார மூங்கில் ரக வகையைச் சேர்ந்ததாக கூறப்படுகிறது

        

திங்கள், அக்டோபர் 26, 2015

நம்பிக்கை ஒளி

*சிறகின்றி பறக்கும் வெற்றிப் பெண்- தத்சியானா க்விட்ஸ்கோ *
*
இரண்டு கால்களும் இல்லாத பெலாரஸ் வீராங்கனை உலகை கம்பீரமாக நிமிர்ந்து உட்காரவைத்திருக்கிறார்.
அவர் இரண்டு கால்களும், நான்கு கைவிரல்களும் இல்லாத தத்சியானா க்விட்ஸ்கோ. உபயம்: 1986-ல் செர்னோபில் அணு உலை விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட கதிரியக்கப் பாதிப்பு.
தவழுதலிலிருந்து பாய்ச்சலுக்கு..
கிழக்கு ஐரோப்பா முழுவதும் கதிரியக்கம் பரவக் காரணமாக இருந்த செர்னோபில் அணுஉலை விபத்து நிகழ்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் பெலாரஸில் தத்சியானா பிறந்தார். மிக மோசமான பிறவிக் குறைபாடுகளுடன். இரண்டு முழங்கால்களுக்குக் கீழே எதுவுமில்லை. இடது கையில் மூன்று விரல்கள் இல்லை. வலது கையில் ஒரு விரல் இல்லை. இவ்வளவு மோசமான உடல்உறுப்புக் குளறுபடிகளுக்கு, தாய்க்கு ஏற்பட்ட கதிரியக்க பாதிப்பே காரணம் என்றார்கள் மருத்துவர்கள்.
பிறவிக் குறைபாடுகளுடன் இருந்த பிஞ்சுத் தளிரின் முகத்தை, ஒவ்வொரு நாள் காலையிலும் பார்த்தபோது அப்பா, அம்மாவின் மனம் வலித்தது. நீண்ட காலத்துக்கு அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. வருத்தம் மேலிட ஆதரவற்றோர் இல்லத்துக்கு தாரைவார்த்தார்கள். கால்கள் இல்லாத காக்கை மூலையில் முடங்காதபோது, கால்கள் இல்லாத தத்சியானா மட்டும் பேசாமலா இருப்பாள்? முட்டிகளை இழுத்து இழுத்து தவழக் கற்றாள். 24 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தவழுதல் பாய்ச்சலாக மாறும் என்று யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். யாரும் நினைக்காததை தத்சியானா நிகழ்த்திக் காட்டினார்.
இன்றைக்கு, தொழில்முறை ஓட்டப் பந்தய வீராங்கனைகளுக்கு இணையாக அவர் கால்களால் பறந்துகொண்டிருக்கிறார் - ஒரு மாரத்தான் வீராங்கனையாக, பெண் பாடிபில்டராக. நேரடியாகவும் சமூக வலைதளங்களிலும் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் அவர் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது.
வருத்தம் ஏதுமில்லை..
தத்சியானாவுக்கு நான்கு வயதானபோது ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து ஒரு குடும்பம் அவளைத் தத்தெடுத்தது. பதின்பருவத்தைத் தொட்டபோது தத்சியானாவுக்கு ஒரு அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்தது. அன்பு பொங்க அவளைத் தத்தெடுத்த அதே குடும்பம்தான், பிஞ்சு வயதில் அவளைத் தத்துக்கொடுத்த குடும்பம்தான் என்பது. தாரை வார்த்த அவளுடைய பெற்றோர் மனசு மட்டும் இரும்பினால் செய்யப்பட்டிருக்கவில்லையே!
“என் அம்மா லூடாவின் 13 வயதுப் படத்தை ஒரு நாள் பார்த்தபோது, என் முகமும் அவருடைய முகமும் ஒன்றுபோல் இருப்பதைப் பார்த்தேன். அம்மாவிடம் கேட்டபோது, அவள் உடைந்து அழுதாள். ‘நான்தான் உன் அம்மா தத்சி. நீ பிறந்த பிறகு தினசரி உன்னைப் பார்க்க தைரியம் இல்லாமல் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தோம். மனசு பொறுக்காமல் நான்கு வயதில் மீண்டும் கூட்டிக்கொண்டு வந்தோம்' என்றார்.”
தன்னை ஆதரவற்றோர் இல்லத்தில் விட்ட பெற்றோர் குறித்து தத்சியானாவுக்கு சின்னதாகக்கூட வருத்தமில்லை. தனக்கு எதிராக எதையும் அவர்கள் சிந்தித்திருக்க மாட்டார்கள் என்று சந்தேகங்களை தூரமாகத் தள்ளி வைக்கிறார்.
கிடைத்தது கால்..
ஐந்து வயதில் பெலராஸில் இருந்த மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கான உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ‘மீட்டெடுக்கும் நலஅமைப்பு' என்ற அமெரிக்க மருத்துவர் அமைப்பு, பெலாரஸ் குழந்தைகளுக்கு உதவ முன்வந்த நேரத்தில் அவர்களுடைய கண்ணில் தத்சியானா பட்டார். அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் சிட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆறு வயதில் அவருக்குச் செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன. பள்ளி நாட்களில் பெலாரஸில் படிக்கும் அவர், ஒவ்வொரு கோடைக் காலத்திலும் சிகிச்சை பெற தனியாகவே அமெரிக்கா சென்றுவந்தார். அங்கு அவரை மூன்று தத்துக் குடும்பங்கள் மாறிமாறிக் கவனித்துக்கொண்டன.
2008-ல் கான்சாஸ் சிட்டிக்கே இடம்பெயர்ந்த அவர், அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கச் சேர்ந்தார். அந்த காலத்தில் ஃபுளோரிடாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதற்கான விலை மதிப்புமிக்க செயற்கை பிளேடு கால்களை இலவசமாகக் கொடுத்தது.
நடக்கிறேன், பறக்கிறேன்..
“செயற்கை பிளேடுகளை என் கால்களில் பொருத்திக்கொண்டு ஓட ஆரம்பித்தவுடன், நிலத்திலிருந்து ஜிவ்வென்று மேலெழும்பி பறப்பதைப் போன்ற உணர்வைப் பெற்றேன். வேகமான ஓட்டத்தை எப்படி நிறுவதெனத் தெரியாமல் விழித்தேன். யாராவது என்னைத் தடுத்து நிறுத்த வேண்டியிருக்கிறது. என் வாழ்நாளில் நான் ஓடியதில்லை என்பதாலும், எப்போதும் பறந்துகொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுவதாலும்தான் இப்படி நடக்கிறது” உண்மைதான், கால்கள் அற்ற ஒரு மாற்றுத் திறனாளிக்கு, செயற்கை பிளேடுகள் தரும் சிறகு அப்படிப்பட்டது.
பிளேடுகள் கிடைத்த மூன்றே மாதங்களில் 5 கி.மீ. ஒட்டம் ஒன்றில் முதன்முதலில் தத்சியானா பங்கேற்றார். பிறகு டஜனுக்கும் மேற்பட்ட 10 கி.மீ. ஓட்டப் பந்தயங்களிலும் இரண்டு ஹாஃப் மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார்.
ஓட்டப் பந்தயங்களோடு அவருடைய தாகம் தீர்ந்துவிடவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாடிபில்டிங் பந்தயம் ஒன்றில் பங்கேற்று அசத்தியிருக்கிறார். உடல் முழுமைக்குமான ஜிம் பயிற்சிகளையும் சவாலுடன் செய்துவருகிறார். இதில் பளுதூக்கும் பயிற்சி உள்ளிட்டவை அடங்கும். “எல்லா ஜிம் பயிற்சிகளையும் செய்ய முடியவில்லையே என்று கோபம் வரத்தான் செய்கிறது” என்று சொல்லி வாயைப் பிளக்க வைக்கிறார்.
என் உடல் என் பெருமை..
“சில நேரங்களில் ஹீல்ஸ் வைத்த செருப்பு அணிந்தால் இன்னும் அழகாக இருக்குமே என்று மனசு ஓரத்தில் ஓர் ஆசை எட்டிப்பார்க்கும். ஆனால், எனக்கு நிஜக் கால்கள் இருந்திருந்தால் இப்போது இருப்பதைப் போல, என் மீதும் என் உடல் மீதும் அதீத விருப்பத்துடன் இருந்திருப்பேனா தெரியவில்லை. இப்போது இருப்பதைப் போல திருப்தியுடன் இருந்திருப்பேன் என்று நிச்சயமாகத் தோன்றவில்லை.
உடல்ரீதியிலும் மனரீதியிலும் உணர்ச்சிரீதியிலும் என்னுடைய மாற்றுத் திறன் காரணமாகவே நான் உறுதியானவளாக இருக்கிறேன். ஓட்டப் பந்தயம் என்னை ஊக்கப்படுத்தியிருக்கிறது. கால்கள் இல்லாவிட்டால் என்ன, என்னால் இப்போது ஓட முடிகிறதே என்று என் மனம் குதூகலிக்கிறது. ஓடும் பிளேடுகளைப் பொருத்திக்கொண்டு பறந்து செல்ல யத்தனிக்கிறேன்” என்று உற்சாகம் கொப்பளிக்கப் பேசுகிறார்.
இதுவரை அவர் பங்கேற்றது எதுவும் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள் அல்ல என்பதால், பதக்கம் வெல்லாததைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. மாறாக, முகம் தெரியாத ஆயிரக் கணக்கான ரசிகர்களை வலைதளம் மூலமாக வென்று அவர் வாகை சூடியிருக்கிறார்.
“அவர்களுக்கு நான் உத்வேகம் தருவதாக”, எத்தனையோ பேர் குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். “என்னைப் போன்ற ஒரு மனுஷியால் என்ன செய்ய முடியும் என்பதை மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமல்ல, இயல்பான திறன் கொண்டோருக்கும் நான் உணர்த்திக்கொண்டே இருக்கிறேன். மனதில் உறுதி இருந்தால், எதற்காகவும் அயர்ந்து உட்காரத் தேவையில்லை. வெற்றி நம் கூடவே ஓடி வரும்,” முடிக்கிறார் தத்சியானா.
வெற்றி இவரைப் போன்ற மன உறுதி மிக்கவர்களைத் தேடி வராமல் வேறு யாரிடம்தான் போகும்?
**
செய்தி : ஆதி
( தி ஹிந்து )